சச்சினுக்கு விருது, டேபிள் டென்னிஸில் அசத்திய தமிழக வீரர்கள் - பிப்ரவரி ஸ்போர்ட்ஸ் ரவுண்டப்

Update: 2020-02-29 14:33 GMT

இந்தப் பிப்ரவரி மாதத்தில் விளையாட்டு களத்தில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பல மகத்தான செயல்களை செய்தனர். அவற்றை நீங்கள் படிக்க தவறியிருந்தால், இதோ உங்களுக்கான ஸ்போர்ட்ஸ் ரவுண்டப்.

சொந்த மண்ணில் கடைசி டென்னிஸ் தொடரை இழந்த பயஸ்:

இந்தியாவின் அனுபவ டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2020ஆம் ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் இந்தியாவில் தனது கடைசி தொடராக ஏடிபி பெங்களூரு சேலஞ்சரில் களமிறங்கினார்.

சொந்த மண்ணில் தனது கடைசி தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயஸ் ஜோடி இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்-பூரவ் ராஜா இணையிடம் தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தியாவில் தனது கடைசித் தொடரை பயஸ் தோல்வியுடன் முடித்தார். பெங்களூரு ஓபன் கடைசி நாளில் லியாண்டர் பயஸிற்கு ஒரு பாராட்டு நிகழ்ச்சியை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லாரஸ் ‘விளையாட்டின் சிறந்த தருணங்கள்’ விருது வென்ற சச்சின்:

லாரஸ் என்ற அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.இதில் ‘விளையாட்டின் சிறந்த தருணங்கள்’ என்ற விருது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

இது சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற தருணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட சச்சின் டெண்டுல்கர், “உலகக் கோப்பையை கையில் வைத்திருக்கும் போது என்ன நினைத்தேன் அதேயே தான் இப்போதும் உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ஹங்கேரியன் ஓபனில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத்-சத்யன் இணை:

ஹங்கேரி ஓபன் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் ஷரத் கமல் – சத்யன் பங்கேற்றனர். இதில் சிறப்பாக விளையாடிய இந்திய இணை இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் துடா பெனெடிக்ட் – ப்ராஸிக்கா பேட்ரிக்கை சரத் கமல்-சத்யன் ஜோடி எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் 5-11, 9-11, 11-8, 9-11 என்ற கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல்- சத்யன் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது.

ஆசிய மல்யுத்தத்தில் 20 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா:

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் கடந்த 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இந்திய அணி மொத்தம் 20 பதக்கங்களை பெற்றது.

அத்துடன் பதக்கப் பட்டியலில் இந்திய அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. எனினும் இந்தத் தொடரில் அதிக பதக்கம் வென்ற அணியாக இந்திய அணியே இருந்தது. இந்திய அணி கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் ஒரு தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றது.

மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி:

மகளிர் டி20 உலகக் கோப்பை இந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை பந்தாடியது. மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியிடம் த்ரில் வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை துவம்சம் செய்து வெற்றிப் பெற்றது. இதன்மூலம் நான்காவது முறையாக இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.