ஐபிஎல்: முருகன் அஸ்வினின் வாழ்க்கையை மாற்றிய ஜிஆர்இ தேர்வு!

Update: 2020-10-16 03:54 GMT

நடப்புப் ஐபிஎல் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், நடராஜன், வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மற்றொரு தமிழக வீரர் முருகன் அஸ்வினும் கலக்கி வருகிறார். யார் இவர்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகன் அஸ்வின் ஒரு லெக் ஸ்பின் பந்துவீச்சாளார். இவருக்கு சிறு வயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் களம் கண்டு வந்தார். இவருக்கு சிறு வயது முதல் படிப்பும் கிரிக்கெட் விளையாட்டும் இயல்பாக வந்ததால், இரண்டிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

எனினும் தனது மூன்றாம் ஆண்டு கல்லூரி படிப்பு வரை இவர் கிரிக்கெட் விளையாட்டில் தீவிரம் காட்டவில்லை. மூன்றாவது ஆண்டு பட்டப்படிப்பில் இவர் ஜிஆர்இ தேர்வை எழுதிய பிறகு அவருக்குப் படிப்பு சார்ந்த எதிர்காலம் சரியானதல்ல என்ற முடிவு எடுத்தார்.

இந்தச் சூழலில் தான் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் வந்தது. சிறப்பாக பயிற்சி செய்து இந்தத் தொடருக்கு முருகன் அஸ்வின் தேர்வாகினார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதால், இவருக்கு புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஐபிஎல் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அதனை சரியாக முருகன் அஸ்வின் பயன்படுத்தி கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அந்த ஐபிஎல் தொடரில் வெறும் 5 விக்கெட் மட்டும் வீழ்த்தி ஏமாற்றம் அளித்தார். எனினும் நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முருகன் அஸ்வினை சரியாக பஞ்சாப் அணி பயன்படுத்தவில்லை என்று சச்சின் கூறியுள்ளார். தனது பந்துவீச்சு மூலம் இம்முறை நட்சத்திர வீரர் சச்சினை இவர் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முருகன் அஸ்வினுக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் பொறியியல் படித்துள்ளனர். எனவே தனது கல்லூரியின் சீனியர் அஸ்வினை போல் முருகன் அஸ்வினும் கிரிக்கெட் களத்தில் சாதிக்க காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘அஸ்வின் மண்காட் டூ நடுவரின் வைடு முடிவு வரை’- டாப் 10 சர்ச்சைகள்!