தீப்தி சர்மாவை அர்ஜூனா விருது வரை அழைத்து சென்ற 50 மீட்டர் ‘த்ரோ’

Update: 2020-08-22 14:43 GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவிற்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியமான பிசிசிஐ, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீப்தி சர்மாவின் வாழ்க்கையே ஒரு 50 மீட்டர் த்ரோ திருப்பி உள்ளது. அந்த த்ரோ தான் அவரை கிரிக்கெட் விளையாட்டிற்கு அழைத்து வந்து அர்ஜூனா விருதையும் பெற்று தந்துள்ளது. அது என்ன த்ரோ?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் தீப்தி சர்மா. இவர் ஒரு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் மகள். இவருக்கு சுமித் சர்மா என்ற அண்ணன் உள்ளார். சுமித் சர்மா ஒரு கிரிக்கெட் வீரராக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இதனால் அவர் கிரிக்கெட் பயிற்சிக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அவருடன் தங்கையான தீப்தி சர்மாவும் அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

தீப்தி சர்மா

அண்ணன் சுமித்தின் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்துகள் தன் பக்கம் வந்தால் தீப்தி சர்மா எடுத்து வீசுவது வழக்கம். அந்தவகையில் ஒரு நாள் தன் பக்கம் வந்த பந்து ஒன்றை கிட்டதட்ட 50 மீட்டர் தூரத்திலிருந்து துள்ளியமாக ஸ்டெம்பை நோக்கி தீப்தி சர்மா வீசியுள்ளார். அந்தப் பந்து சரியாக ஸ்டெம்பை தகர்த்தது. அந்த ஸ்டெம்ப் விழுந்தப் போதுதான் தீப்தி சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமானது. தீப்தி சர்மா வீசிய இந்த த்ரோவை அப்போதைய மகளிர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஹேமலதா கலா பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த த்ரோவிற்கு பின் தீப்தி சர்மாவின் ஆற்றலை பார்த்த அவரது அண்ணன் சுமித் சர்மா அவருக்கு முதல் பயிற்சியாளராக மாறியுள்ளார். அப்போது முதல் பேட்டிங், பவுலிங், ஃபிள்டிங் என அனைத்திலும் தீப்தி சர்மா ஆர்வம் காட்டினார். இதன்விளைவாக நாளடைவில் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக உருவெடுத்தார்.

இதுவரை இந்திய மகளிர் அணிக்காக 54 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 1417 ரன்களும் 64 விக்கெட்களையும் எடுத்துள்ளார். அதேபோல 43 டி20 போட்டிகளில் களமிறங்கி 429 ரன்களும் 53 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இவை தவிர இந்திய அளவில் மகளிர் ஒருநாள் போட்டியில் தனிநபராக இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இவரின் அதிகபட்ச ஸ்கோர் 188 ரன்களாகும்.

மேலும் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் தீப்தி சர்மா படைத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்கள் மற்றும் 50 விக்கெட் வீழ்த்திய இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் தீப்தி சர்மா படைத்துள்ளார்.

இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தீப்தியின் சாதனைகளை குறிப்பிட்டு வாழ்த்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய மகளிர் அணியின் சுழற்பந்து வீராங்கனை பூனம் யாதவ் அர்ஜூனா விருதை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘என் அம்மா செய்த தியாகங்கள் அனைத்தும் இப்போது கண் முன் வருகிறது’- மாரியப்பன்