அண்மை செய்திகள்
'சச்சின்,சச்சின்' முதல் சச்சின் சாதனையை முறியடித்தது வரை:ஷாபாலியின் ஆசையை நிறைவேற்றிய சச்சின்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தற்போதைய சூப்பர் ஸ்டார் ஷாபாலி வர்மா தான். இளம் கன்று பயமறியாது என்பார்கள். அதற்குஏற்ப 16வயதேயான இந்த இளம் கன்று பந்துவீச்சாளர்களை கண்டு அஞ்சாமல் பந்துகளை அடித்து துவம்சம் செய்து வருகிறார். 2013ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியை 9வயது சிறுமியான ஷாபாலி தனது தந்தையுடன் வந்திருந்தார்.
அந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். அப்போது 9 வயது ஷாபாலி வர்மா தனது தந்தையின் மேல் அமர்ந்து பார்வையாளர்கள் பகுதியிலிருந்து 'சச்சின் சச்சின்' என்று தனது கிரிக்கெட் கடவுளை முதல் முறையாக பார்த்து ரசித்தார். சச்சின் மீது கொண்டு ஈடுபாட்டால் அவர் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்தார்.
அந்தச் சம்பவம் நடந்து முடிந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி 15வயது 285 நாட்களான ஷாபாலி வர்மா இந்தியாவிற்காக களமிறங்கி அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் தனது ஐகான் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது 16வயது 213 நாட்களில் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்திருந்தார். அந்தச் சாதனையை ஷாபாலி முறியடித்திருந்தார். இந்தச் சாதனையை முறியடித்திருந்தாலும் அவருக்கு ஒரு நீண்ட நாள் கனவு இருந்துள்ளது. அது தனது கிரிக்கெட் கடவுளான சச்சின் டெண்டுல்கரை நேரில் பார்க்க வேண்டும் என்பது தான்.
இந்நிலையில் ஷாபாலியின் அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆஸ்திரேலிய காட்டு தீக்கு நிதி திரட்டும் போட்டியில் பங்கேற்பதற்காக சச்சின் டெண்டுல்கரும் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
இந்தச் சூழலில் இன்று ஷாபாலி வர்மா ஆஸ்திரேலியாவில் தனது ஐகான வீரரான சச்சினை நேரில் பார்த்துள்ளார். இதுகுறித்து ஷாபாலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் கிரிக்கெட்டை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம் சச்சின் சார் தான். என்னுடைய குடும்பத்தினர் சச்சின் ரசித்தைவிட கடவுளாக நினைத்து வழிபட்டது தான் அதிகம். இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள், ஏனெனில் எனது கனவு நிறைவேறிய நாள்" எனப் பதிவிட்டுள்ளார்.