அண்மை செய்திகள்
கொரோனா காலத்திலும் கொண்டாட வைத்த 5 விளையாட்டு தருணங்கள்!
2020ஆம் ஆண்டின் முக்கியமான நிகழ்வாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. கொரோனா பாதிப்பால் விளையாட்டு போட்டிகளும் பெரும் அளவில் பாதிப்பு அடைந்தன. இந்தாண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு விளையாட்டு களத்தில் நடைபெற்ற டாப்-5 இந்திய தருணங்கள் என்னென்ன?
5. சானியா மிர்சாவின் கம்பேக்:
2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றார். சானியா மிர்சாவிற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறு காரணமாக டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடாமல் சானியா மிர்சா இருந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தான் மீண்டும் பயிற்சி செய்வது தொடர்பாக நிழற்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் சானியா மிர்சா பதிவிட்டு வந்தார். கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். அதன்பின்னர் தற்போது 2020ஆம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் களத்தில் இறங்கி அசத்தினார். இதன்மூலம் மகப்பேறு காலத்திற்கு பிறகும் விளையாட்டு துறையில் சாதிக்க முடியும் என்று சானியா மிர்சா நிரூபித்துள்ளார்.
4. மகளிர் டி20 உலகக் கோப்பை:
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதற்கு முன்பாக நடைபெற்ற கடைசி கிரிக்கெட் தொடர் மகளிர் டி20 உலகக் கோப்பை தான். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டி வரை தகுதிப் பெற்று அசத்தியது. மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று நடைபெற்ற இறுதிப் போட்டியை 86ஆயிரம் பேர் நேரில் பார்த்து சாதனைப் படைத்தனர். இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது சற்று வருத்தமளித்தது.
3. இணையதள செஸ் ஒலிம்பியாட் வெற்றி:
கொரோனா ஊரடங்கு காலத்தில் செஸ் விளையாட்டு போட்டிகள் ஆன்லைன் தளத்தில் நடைபெற்றன. இதில் இணையதள செஸ் ஒலிம்பியாட் 2020 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் விதித் குஜராத்தி, கோனேரு ஹம்பி, விஸ்வநாதன் ஆனந்த், பிரக்நானந்தா உள்ளிட்டவர்களை கொண்ட இந்தியா அணி பங்கேற்றது. மேலும் சீனா, மங்கோலியா, ஜெர்மனி உள்ளிட்ட அணிகளும் இத்தொடரில் பங்கேற்றன.
இந்தத் தொடரில் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தி வந்தது. இறுதிப் போட்டியில் ரஷ்ய அணியை இந்திய அணி வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
2. ஐ.எஸ்.எல் தொடர்:
கொரோனா ஊரடங்கினால் இந்தியாவில் பெரிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்தச் சூழலில் கொரோனா ஊரடங்கில் கொடுக்கப்பட்ட தளர்வுகளுக்கு பிறகு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை தற்போது வரை சிறப்பாக நடந்து வருகிறது. இதன்மூலம் கொரோனா பாதிப்பிற்கு பின் இந்தியாவில் மீண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1.பயோ பபுள் உடன் நடைபெற்ற ஐபிஎல் தொடர்:
இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்றது. இந்தத் தொடர் முழுவதும் வீரர்கள் பயோ பபுள் என்ற கட்டுபாட்டை கடைபிடித்தனர். மேலும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடர் இதுவேயாகும். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.
மேலும் படிக்க: புஜாரா தொடர்பான இனவெறி பட்டப் பெயரை வர்ணனையின் போது எடுத்த வார்ன்