அண்மை செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் 2020: பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்தால் காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா
இணையதள செஸ் ஒலிம்பியாட் 2020 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாளான நேற்று பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நேற்றையை போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த சீனா, ஜெர்மனி, ஜார்ஜியா ஆகிய அணிகளுட ன் மோதியது. இதில் நம்பர் ஒன் அணியான சீனாவிற்கு எதிராக இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் திவ்யா தேஷ்முக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 15வயதான பிரக்ஞானந்தா தனது துள்ளியமான ஆட்டத்தால் லீ யுவானை வீழ்த்தி அசத்தினார். அதேபோல திவ்யா தேஷ்முக் ஜினர் சூவை வீழ்த்தினார். 10 மற்றும் 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டத்தை திவ்யா ஏற்கெனவே வென்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விதித் குஜராத்தி, கோனேரு ஹம்பி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் தங்களது போட்டிகளை டிரா செய்தனர். இதனால் சீனாவை இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. மேலும் நேற்று நடைபெற்ற ஜெர்மனிக்கு எதிரான போட்டியை 4.5-1.5 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
விதித் குஜராத்தி
அத்துடன் ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியையும் 4-2 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 17 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் இந்தத் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய அணி தனது காலிறுதிப் போட்டியை வரும் 28ஆம் தேதி விளையாட உள்ளது.
Nerve wracking moments throughout the day! So happy to see India win all the matches today. Defeating China in the last round made sure we qualify to Quarter-Finals! pic.twitter.com/MG2QGuzHLg
— Vidit Gujrathi (@viditchess) August 23, 2020
முன்னதாக நேற்று முன் தினம் இந்திய அணி இந்தோனேஷியா, ஈரான் மற்றும் மங்கோலிய அணிகளுக்கு எதிராக விளையாடியது. இதில் மங்கோலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விதித் குஜராத்தி மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரும் மின்சாரம் தடைப்பட்டதால் தோல்வியை தழுவியுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் இந்தத் தோல்விகளிலிருந்து மீண்ட இந்திய அணி அசத்தலாக வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‘என் அம்மா செய்த தியாகங்கள் அனைத்தும் இப்போது கண் முன் வருகிறது’- மாரியப்பன்