அண்மை செய்திகள்
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை லெவன் அணியில் பூனம் யாதவ்
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று மெல்பெர்ன் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அத்துடன் ஐந்தாவது முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்ற அனைத்து வீராங்கனைகளிலிருந்து ஐசிசி உலகக் கோப்பை லெவன் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணியை முன்னாள் வீராங்கனை அஞ்சும் சோப்ரா, லிசா ஸ்தாலேகர், முன்னாள் ஜாம்பவான் வீரர் இயன் பிஷப் மற்றும் பத்திரிகையாளர் நிகோல்சன் ஆகியோர் தேர்வு செய்தனர்.
இந்த அணியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவிலிருந்து அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லென்னிங், ஜான்சன்,மேகன் ஸ்கட் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இங்கிலாந்திலிருந்து ஹீதர் நைட், ஸ்ரப்சோல், ஸ்கிவர்,எக்லோஸ்டோன் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்க அணியிலிருந்து வுல்வார்ட் இடம்பிடித்துள்ளார்.
இந்த ஐசிசி லெவன் அணியில் இந்தியாவிலிருந்து பூனம் யாதவ் இடம்பிடித்துள்ளார். மேலும் அணியின் 12ஆவது வீராங்கனையாக ஷாபாலி வர்மா இடம்பிடித்துள்ளார். 2020 டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் பூனம் யாதவ் 10 விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார்.
அதேபோல இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா இந்தத் தொடரில் 163 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார். எனவே இவர்கள் இரண்டு பேர் மட்டுமே ஐசிசியின் அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று முடிந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகி விருதை வென்ற பெத் மூனி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இன்று வெளியாகியுள்ள புதிய டி20 பேட்டிங் வீராங்கனைகள் தரவரிசையில் பெத் மூனி முதலிடத்தை பிடித்தார். இதில் இந்தியாவின் ஷாபாலி வர்மா முதலிடத்திலிருந்து பின்தங்கி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.