அண்மை செய்திகள்
'உன் கனவை துரத்து, அது ஒருநாள் சாத்தியமாகும்'-ஷாபாலிக்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஷாபாலி வர்மா. இவருடைய ஐகான் மற்றும் ரோல் மாடல் எல்லாமே ஒரே ஒருவர் தான். அவர் வேறு யாரும் இல்லை கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தான். சமீபத்தில் ஷாபாலி வர்மா தனது ஐகான் வீரரான சச்சின் டெண்டுல்கரை ஆஸ்திரேலியாவில் சந்தித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அந்தப் பதிவிற்கு சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "உங்களை சந்தித்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய கடைசி ரஞ்சிக் கோப்பை போட்டியை நீங்கள் பார்க்க வந்து தற்போது நீங்களே இந்தியாவிற்கு விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
உங்களது கனவை தொடர்ந்து துரத்துங்கள். ஒருநாள் உங்கள் கனவு நிச்சயம் உண்மையாகும். எப்போதும் கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்து விளையாடுங்கள். அத்துடன் எப்போதும் உங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த ஆட்டத்தை விளையாடுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை ஷாபாலி வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் கிரிக்கெட்டை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம் சச்சின் சார் தான். என்னுடைய குடும்பத்தினர் சச்சின் ரசித்தைவிட கடவுளாக நினைத்து வழிபட்டது தான் அதிகம். இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள், ஏனெனில் எனது கனவு நிறைவேறிய நாள்” எனப் பதிவிட்டிருந்தார்.
ஷாபாலி வர்மா இந்தப் பதிவு மிகவும் வைரலானது. இந்தச் சூழலில் தற்போது சச்சின் டெண்டுல்கர் அதற்கு தனது பதிலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனெவே ஷபாலியிடம் அவரது தந்தை, “உனது வாழ்வில் முதல் 19ஆண்டுகள் உன்னுடையது. அதில் நீ என்ன வேண்டுமானாலும் செய்து பெரிதாக சாதிக்க வேண்டும். அவ்வாறு 19வயதிற்குள் சாதிக்காமல் விட்டால், பிறகு நான் சொல்வதை நீ கேட்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இவர்கள் அனைவரின் அறிவுரையையும் கேட்டு ஷாபாலி வர்மா மகளிர் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக வலம் வரவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அத்துடன் ஷாபாலி வர்மா தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்தி இந்தியாவிற்கு கோப்பை பெற்று தருவார் என்று அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.