அண்மை செய்திகள்
முத்தரப்புத் தொடர்: மந்தானா ஆட்டம் வீண்-இந்தியாவை வீழ்த்தி ஆஸி சாம்பியன்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்றது. இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து ஆகிய அணிகள் விளையாடின. அனைத்து அணிகளும் மூன்று வெற்றியைப் பெற்று இருந்தால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல ஆட்டத்தின் முதல் ஒவரிலேயே ஹீலி 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடந்த போட்டியில் அசத்திய கார்ட்னர் மற்றும் மூனி ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் சேர்த்தனர். கார்ட்னர் 24 பந்துகளில் 5 பவுண்டரிகளின் உதவியுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் மேக் லென்னிங் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த வீராங்கனைகள் சரியாக விளையாடவில்லை. ஹேய்ன்ஸ் மட்டும் 18 ரன்கள் அடித்தார்.
எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய மூனி அரைசதம் கடந்து அசத்தினார். இறுதி ஆட்டமிழக்காமல் இருந்த மூனி 54 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி சர்மா மற்றும் ராஜேஸ்வரி தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தனர்.
இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் இலக்கு என களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இந்திய அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடும் ரிச்சா கோஷ் களமிறங்கினார். இவரும் ஸ்மிருதி மந்தானாவும் இந்திய அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.
ரிச்சா கோஷ் 23 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும் ஸ்மிருதி மந்தானா கடந்த போட்டியில் விளையாடியதை போல இப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் அசத்தலாக விளையாடி இப்போட்டியிலும் அரைசதம் கடந்தார்.
மந்தானா 37 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சேர்த்திருந்த போது ஸ்மிருதி மந்தானா எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தின் மூலம் முத்தரப்புத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மந்தானா பெற்றார்.
பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 16 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இதன்மூலம் முத்தரப்புத் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. முத்தரப்புத் தொடரை தொடர்ந்து மகளிர் டி20 உலகக் கோப்பை வரும் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது.