அண்மை செய்திகள்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷாபாலி வர்மா அடித்த அந்த வைரலான ஷாட்- வீடியோ

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கார்ட்னர் 53 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 93 ரன்கள் விளாசினார். இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்தியா சார்பில் 16வயது வீராங்கனை ஷாபாலி வர்மா 49 ரன்களும்,ஸ்மிருதி மந்தானா 55 ரன்களும் விளாசினர்.
சமூக வலைதளங்களில் இந்தியாவின் வெற்றியை விட ஷாபாலி வர்மா அடித்த அந்த ஒரு ஷாட் அனைவரையும் கவர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது அத்துடன் 16வயதான இளம் வீராங்கனைக்கு பாராட்டுகள் பெருகி வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கின் போது 5ஆவது ஓவரை ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்ட் வீசினார்.
இந்த ஓவரின் நான்காவது பந்தை இளம் வீராங்கனை ஷாபாலி வர்மா இறங்கி வந்து நேர் திசையில் அசத்தலாக தூக்கி அடித்து சிக்சருக்கு விரட்டினார். சர்வதேச மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மேகன் ஸ்ட் தான் முதலிடத்தில் உள்ளார். முதல் இடத்திலுள்ள வீராங்கனையின் பந்துவீச்சை ஷாபாலி சிக்சருக்கு அடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.