ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரவிக்குமார் தஹியா தங்கம் வென்று அசத்தல்

Update: 2020-02-22 17:24 GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று ஆடவர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன.

இதில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா தஜகிஸ்தான் நாட்டின் வோஹிடோவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய ரவிக்குமார் தஹியா 10-0 என்ற கணக்கில் போட்டியை வென்று தங்கப் பதக்கம் பெற்றார்.

மேலும் 65 கிலோ எடைப் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஜ்ரங் புனியா இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் டோக்கிடோவிடம் 2-10 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதேபோல 79 கிலோ எடைப் பிரிவில் கவுரவ் பலியான் கிரிகிஸ்தான் வீரர் அர்சாலனிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 97 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்யவார்த் கடியான் ஈரான் வீரர் முகமதுஷஃபிக் இடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கவுரவ் பலியான்

இதன்மூலம் ஐந்தாவது நாளான இன்று இந்தியா ஒரு தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றது. மேலும் நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த தொடரில் இந்திய அணி இதுவரை 5 தங்கம்,5 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாள் என்பதால் இந்திய அணி எவ்வளவு பதக்கங்களுடன் தொடரை முடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.