இளைஞர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுக்கும் கால்பந்து!

Update: 2020-08-23 15:34 GMT

நாகாலாந்து - அஸ்ஸாம் எல்லையில் அமைந்துள்ள மேராபானி என்ற சிறிய கிராமத்தில் 22 வயதே ஆன லிரோன்தங் லோதா என்ற கால்பந்து வீரர் மிகப்பெரிய செயல் ஒன்றை தொடர்ந்து செய்து வருகிறார். போதை பொருட்கள் உபயோகம் உட்பட பல மோசமான விஷயங்கள் அடிக்கடி நடக்கும் இந்த கிராமத்தில் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க அவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார் லோதா.

சுடி என்ற கிராமத்தில் இருந்து குடும்பத்துடன் மேராபானி கிராமத்திற்கு புலம்பெயர்ந்தவர் லோதா. ஐ லீக் அணியான ரவுண்ட்கிளாஸ் பஞ்சாப் எப் சி அணிக்காக விளையாடி வரும் இவர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனது வீட்டிற்கு திரும்பினார். இந்த பயிற்சிகளை ஜூன் மாதம் முதல் செய்து வருகிறார் லோதா.

இதுகுறித்து ஈஸ்ட்மோஜோ ஆன்லைன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது " இது திட்டமிட்ட ஒன்று அல்ல. எனக்கு நேரம் நிறைய இருந்ததால் இதை தொடங்கினேன். முதலில் 12 வீரர்களுடன் தொடங்கிய இந்த பயிற்சி முகாமில் தற்போது 21 வீரர்கள் உள்ளார்கள். இதன்மூலம் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லாமல் நல்ல விஷயங்களை கற்று கொள்வார்கள். இந்த கால்பந்து பயிற்சிகள் தொடங்கிய பின்னர் சில வீரர்கள் தங்களது தவறான பழக்கங்களை விட்டுவிட்டு கால்பந்தினை முழுமையான அர்ப்பணிப்புடன் விளையாடி வருகின்றனர். இந்த பயிற்சிகள் அவர்களின் வாழ்க்கை முழுவதும் உதவும்" எனக் கூறினார்.

மேலும் இந்த பயிற்சிகளுக்காக பலர் உதவி வருவதாகவும், இதன்மூலம் நாகாலாந்து மாநிலத்திலிருந்து பல திறமையான வீரர்கள் வெளியே வருவார்கள் எனவும் கூறினார்.

மேலும் படிக்க: ‘என் அம்மா செய்த தியாகங்கள் அனைத்தும் இப்போது கண் முன் வருகிறது’- மாரியப்பன்