‘தெரு கிரிக்கெட் டூ உலகக் கோப்பை கிரிக்கெட்’- மகளிர் ஐபிஎல் தொடரில் களமிறங்கும் தமிழ்நாட்டு வீராங்கனையின் பயணம்!

Update: 2020-11-03 02:51 GMT

மகளிர் ஐபிஎல் தொடர் நாளை முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் டிரையல்பிளாஷ்டர்ஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா களமிறங்க உள்ளார். இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கும் ஒரே தமிழக வீராங்கனை இவர் தான். இந்நிலையில் யார் இந்த தயாளன் ஹேமலதா? இவர் எவ்வாறு இந்திய அணியில் இடம்பிடித்தார்?

சென்னையைச் சேர்ந்தவர் தயாளன் ஹேமலதா. இவர் தனது சிறுவயது முதல் தெருவில் கிரிக்கெட் விளையாடி வந்தார். தனது பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை இவர் கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தார். இவர் கல்லூரி படிப்பை எம்.ஒ.பி வைஷ்ணவா கல்லூரியில் பயில ஆரம்பித்தார். அப்போது தான் இவருக்கு மகளிர் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழ்நாட்டு மகளிர் அணியின் தேர்விற்கு சென்றுள்ளார். அப்போது முதல் ஹேமலதாவின் வாழ்க்கை அப்படியே மாறிவிட்டது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மகளிர் அணியில் இடம்பிடித்தார். அதன்பின்னர் தெற்கு மண்டல அணியில் இடம்பிடித்து அசத்தினார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை தனது வீட்டில் தொலைக்காட்சியில் இவர் பார்த்துள்ளார். அந்த சமயம் இவருடைய தாய் அடுத்த உலகக் கோப்பையில் ஹேமலதா விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார். தொடக்க காலத்தில் ஹேமலதாவின் கிரிக்கெட் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தாய், பின்நாட்களில் ஹேமலதாவிற்கு முக்கிய பலமாக இருந்துள்ளார்.

தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்ற ஹேமலதா மிகவும் கடினமாக உழைத்துள்ளார். அதன் பயனாக 2018ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியில் ஹேமலதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் தனது கனவான டி20 உலகக் கோப்பையில் ஹேமலதா முதல் முறையாக களமிறங்கினார். இந்தத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியில் ஹேமலதா களமிறங்கினார்.

வலது கை பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான ஹேமலதா இதுவரை இந்திய மகளிர் அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளிலும் களமிறங்கியுள்ளார். கடந்த முறை நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரில் டிரையில்பிளாஷ்டர்ஸ் அணிக்காக ஹேமலதா களமிறங்கினார். இம்முறையும் டிரையில்பிளாஷ்டர்ஸ் அணிக்காக இவர் களமிறங்க உள்ளார். இம்முறை சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதே அவரின் நோக்கமாக உள்ளது.

மேலும் படிக்க: மகளிர் ஐபிஎல் தொடரில் கலக்க காத்திருக்கும் இந்திய வீராங்கனைகள்!