மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மழை பாதித்தால்  ரிசர்வ் நாள் அறிமுகம்

Update: 2020-03-11 10:24 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுகிழமை ஆஸ்திரேலியாவில் முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக ரத்தானது. இதனால் லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணியான இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

இந்த முடிவிற்கு பல முன்னாள் வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் விமர்சனம் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கடும் விமர்சனம் செய்தனர். இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து அந்த முறையில் வெளியேறியதற்கு பலர் வருத்தம் தெரிவித்தனர். அத்துடன் இந்திய வீராங்கனைகளும் போட்டியில் விளையாடி வெற்றிப் பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பலர் ஐசிசியின் விதியில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று சாடினர்.

மழையால் ரத்தான இந்தியா-இங்கிலாந்து டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி

இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற உள்ள மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி அந்தத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கு ரிசர்வ் நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்தால் அதற்கு அடுத்த நாளில் போட்டியை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். இத்தொடருக்கு நியூசிலாந்து,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன. மற்ற நான்கு அணிகள் மகளிர் ஐசிசி சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தகுதி தொடர் முடிந்த பிறகு உறுதி செய்யப்படும்.

இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 7ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான பரிசுத் தொகை 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் என உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. அப்போது இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.