ஆஸ்திரேலியன் ஓபனில் நம்பர் ஒன் வீரரை தோற்கடித்த தமிழரின் கதை!

Update: 2021-02-11 02:49 GMT

டென்னிஸ் விளையாட்டில் உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மேட்ஸ் வில்லாண்டர். 1988ஆம் ஆண்டு நடைபெற்ற நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 3ல் இவர் பட்டம் வென்றார். அதன்பின்னர் 1989-ஆம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் இவரை இரண்டாவது சுற்றில் தோற்கடித்தவர் ஒரு தமிழன் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? யார் அவர்?

1961-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ரமேஷ் கிருஷ்ணன். இவருக்கு சிறுவயதிலிருந்தே டென்னிஸ் விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது.1970-ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் மற்றும் பிரஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்று அசத்தினார். 1989-ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் இவர் பங்கேற்றுள்ளார்.

அப்போது நம்பர் ஒன் வீரராக இருந்த மேட்ஸ் வில்லாண்டரை எதிர்த்து இரண்டாவது சுற்றில் இவர் விளையாடியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ரமேஷ் கிருஷ்ணன் ஆதிக்கம் செலுத்தி வந்தார். போட்டியின் இறுதியில் 6-3,6-2,7-6 என்ற கணக்கில் வில்லாண்டரை இவர் வீழ்த்தினார். இந்த வெற்றி இவரின் விளையாட்டு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தது.

இந்த வெற்றி குறித்து ஒரு பேட்டியில், ’’நான் அந்தப் போட்டியின் போது மிகவும் பதற்றமாக இருந்தேன். எனினும் சிறப்பாக விளையாடி போட்டியில் வெற்றிப் பெற்றேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத வெற்றியாகும்’’ எனக் கூறினார். டென்னிஸில் அப்போதைய நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி உலகளவில் இந்தியர்களுக்கு பெருமை தேடி தந்தவர் ரமேஷ் கிருஷ்ணன்.

இவர் செய்த சாதனையை போல் வேறு எந்த இந்திய வீரரும் டென்னிஸ் விளையாட்டில் இதுவரை செய்ததில்லை. எனவே இப்படிப்பட்ட மகத்தான டென்னிஸ் வீரரை நாம் என்றும் நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டும் என்பதே டென்னிஸ் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க: டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேறிய அஸ்வின்!