ஒலிம்பிக் தகுதி குத்துச்சண்டை: இறுதிப் போட்டிக்கு முன்னேறி விகாஷ் கிருஷன் அசத்தல்

Update: 2020-03-10 14:34 GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவை சேர்ந்த 8 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றனர். இந்நிலையில் இன்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷன் கஜகிஸ்தானை சேர்ந்த ஷூஷுபோவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தத் தொடரில் அவர் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதில் மகளிர் 69 கிலோ எடைப் பிரிவில் லோவ்லினா ஆசிய சாம்பியன் கோங் ஹூவை எதிர்த்து விளையாடினார். இதில் லோவ்லினா தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்துடன் தொடரிலிருந்து வெளியேறினார்.

லோவ்லினா

அதேபோல ஆடவர் 52 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் ஹூ ஜியாங்கை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 2-3 என்ற கணக்கில் அமித் பங்கால் தோல்வி அடைந்தார். இதனால் அவரும் வெண்கலப் பதக்கத்துடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

விகாஷ் கிருஷன்(69 கிலோ), அமித் பங்கால்(52 கிலோ), லோவ்லினா(69 கிலோ), மேரி கோம்(51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர்(60 கிலோ), பூஜா ராணி(75 கிலோ ) , ஆஷிஷ் குமார்(75 கிலோ ), சதிஷ் குமார்(91 கிலோ )ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

மேலும் சில வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களின் அரையிறுதிப் போட்டியில் இன்று விளையாட உள்ளதால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மேரி கோம், சதிஷ் குமார் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் இன்று வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.