'2021ல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வேண்டாம்'- கருத்து கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2020-12-16 02:19 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கிட்டதட்ட ஆறு மாதங்கள் வரை தடைப்பட்டன. இதன்காரணமாக 2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு நடத்துவது தொடர்பாக ஒரு கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனை ஜப்பான் நாட்டிலுள்ள ஊடகங்கள் சில நடத்தியிருந்தன. அந்த முடிவுகள் விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தன.

ஒரு ஊடகத்தின் கருத்துகணிப்பில் 27 சதவிகிதம் பேர் மட்டுமே 2021ல் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் 31 சதவிகிதம் பேர் ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் தள்ளிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 32 சதவிகிதம் மக்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல மற்றொரு ஊடகத்தின் கருத்து கணிப்பில் 21 சதவிகிதம் பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். அத்துடன் 30 சதவிகிதம் பேர் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைக்க ஆதரவு அளித்துள்ளனர். இந்த கருத்து கணிப்புகள் மிகவும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்திருந்தாலும் போட்டியை நடத்தும் குழு ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று உறுதியளித்துள்ளனர்.

கொரோனா வைரஸிற்கு எதிராக சில உலக நாடுகள் தடுப்பு ஊசிகளை செலுத்த ஆரம்பித்துள்ளனர். எனவே இந்தச் சூழல் ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் நடைபெற ஏதுவாக உள்ளதாக ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. ஜப்பான் மக்களின் தயக்கத்தை அந்நாட்டு அரசு கருத்தில் கொண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அனுமதியளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கெனவே 124ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படன. இதற்கு முன்பு 1916ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்ஸ் முதல் உலக போரால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் இரண்டாம் உலகப் போரால் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நான்காவது முறையாக ரத்தாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே அதிகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்படிக்க: விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தனுஷ்?