டென்னிஸ்: நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சுமித் நாகல்
இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் ப்ராக் சேலஞ்சர் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் நீண்ட நாட்கள் கழித்து டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ப்ராக் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர்கள் சுமித் நாகல், ஶ்ரீராம் பாலாஜி, திவிஜ் சரண் ஆகியோ பங்கேற்று உள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் பங்கேற்றுள்ளார். அவருக்கு முதல் போட்டியில் பை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரிட்டன் நாட்டின் ஜே கிளார்க் என்பவரை சுமித் எதிர் கொண்டார்.
இப்போட்டியில் சுமித் நாகல் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது செட்டை கிளார்க் 7-5 என்ற கணக்கில் வென்றார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்று நடைபெற்றது. இதில் சுமித் 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்த போது கிளார்க் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதனால் 6-3,5-7,4-1 என்ற கணக்கில் இந்திய வீரர் சுமித் நாகல் போட்டியை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்த சுற்றில் சுமித் உள்ளூர் வீரரான ஜிரி லெஹேகாவை எதிர்கொள்ள உள்ளார். இந்த வெற்றி தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுமித் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியை எனக்கு பிறந்த நாள் பரிசாக நானே கொடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். சுமித் நாகலுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிறந்தநாள் ஆகும். இதனை அவர் ஒருநாள் கழித்து வெற்றியுடன் கொண்டாடியுள்ளார்.
Thanks for the birthday wishes everyone. Gave this win to myself as a present 🤪
Prague Round 2 ✅#ATPPragueOpen pic.twitter.com/lKQ8nseWfU
— Sumit Nagal (@nagalsumit) August 17, 2020
முன்னதாக வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ள யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு இந்தியாவின் சுமித் நாகல் நேரடியாக தகுதி பெற்றார். தரவரிசையில் 127ஆவது இடத்தில் இருக்கும் சுமித் நாகல் யுஎஸ் ஓபன் கிராண்டஸ்லாம் தொடரில் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற யுஎஸ் ஓபன் தொடரில் சுமித் நாகல் முதல் போட்டியில் அனுபவ வீரர் ரோஜர் ஃபெடரரிடம் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: "கைப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு அசைக்க முடியாத சக்தி"- துரோணாச்சார்யா விருதுக்கு விண்ணப்பித்துள்ள தஞ்சாவூரை சேர்ந்த பயிற்சியாளர்