திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home அண்மை செய்திகள் "கைப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு அசைக்க முடியாத சக்தி"- துரோணாச்சார்யா விருதுக்கு விண்ணப்பித்துள்ள தஞ்சாவூரை சேர்ந்த பயிற்சியாளர்

“கைப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு அசைக்க முடியாத சக்தி”- துரோணாச்சார்யா விருதுக்கு விண்ணப்பித்துள்ள தஞ்சாவூரை சேர்ந்த பயிற்சியாளர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் 36ஆண்டுகளாக கைப்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று விளையாட்டு தொடர்பான விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டும் இதற்கான விருதகளை அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த சிறந்த பயிற்சியாளருக்கு கொடுக்கப்படும் துரோணாச்சார்யா விருதுக்கு  தமிழ்நாட்டைச் சேர்ந்த கைப்பந்து பயிற்சியாளர்  தட்சிணாமூர்த்தி விண்ணப்பித்துள்ளார். 

அவருடன் ‘பிரிட்ஜ் தமிழ்’ ஒரு கலந்துரையாடலை நடத்தியுள்ளது. அவரிடம் கைப்பந்து தொடர்பான கேள்விகள் மற்றும் துரோணாச்சார்யா விருது குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் உற்சாகமாக பதிலளித்துள்ளார். 

கைப்பந்து மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

நான் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவன். நான் அங்கு தான் எனது பள்ளிப்படிப்பை படித்தேன். நான் பத்தாவது படிக்கும் போது எனது சீனியர்கள் கைப்பந்து விளையாடுவதை பார்த்தேன். அப்போது தான் முதல் முறையாக எனக்கு கைப்பந்து மீது ஆர்வம் வந்தது. இதனைத் தொடர்ந்து நானும் பயிற்சியில் ஈடுப்பட்டேன். 15வயது முதல் எனக்கு கைப்பந்து மீதான காதல் தொடங்கியது. அதன்பின்னர் பல போட்டிகள், பல வெற்றிகள் என்று எனது பயணம் நீண்டு கொண்டே போனது. பின்னர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும் போது பாலன் சாரின் பயிற்சி கிடைத்தது. பல்கலைக் கழக அணிகளில் எனது விளையாட்டு பயணம் தொடர்ந்தது. 

வீரரிலிருந்து பயிற்சியாளர் ஆனது எப்படி?

எனது கல்லூரி பயிற்சியாளர் பாலன் சார் தான் நீ பயிற்சியாளராக சிறப்பாக செயல்படலாம் எனக் கூறினார். அவரின் அறிவுரையை ஏற்று நான் பெங்களூருவில் கைப்பந்து பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். அதனை வெற்றிகரமாக முடித்து பயிற்சி பயணத்தை 1984ஆம் ஆண்டு முதல் தொடங்கினேன். 

கைப்பந்து தட்சிணாமூர்த்தி

சரி உங்களுடைய முதல் பயிற்சி அனுபவம் எங்கே? அது எப்படி இருந்தது?

முதலில் எஸ்.டி.ஏ.டியில் பயிற்சியாளருக்கான நேர்காணலை எதிர்கொண்டேன். அதில் தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டத்தில் பயிற்சியாளராக பணியில் அமர்ந்தேன். என்னுடைய முதல் பயிற்சி அனுபவம் என்றால் அது தமிழ்நாடு சப் ஜூனியர் அணியின் தேசிய போட்டி தான். அதில் நான் தமிழ்நாட்டு அணியின் பயிற்சியாளராக ஆந்திராவிற்கு சென்றேன். அப்போது தமிழ்நாடு அந்தத் தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதில் தற்போது விளையாடி வரும் ஐஓபி அணியின் சுந்தரம் மற்றும் மின்சாரத் துறை அணியின் ஜெயபால் ஆகியோர் முதல் முறையாக களமிறங்கினர். 

இந்திய அளவில் உங்களுடைய முதல் பயிற்சி அனுபவம் எப்படி இருந்தது?

1985ஆம் ஆண்டு இந்திய ஜூனியர் மகளிர் அணியின் முகாம் நடைபெற்றது. அதற்கு நான் பயிற்சியாளராக நியமிக்கபட்டேன். அதன்பின்னர் 1990 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய மகளிர் ஜூனியர் அணிக்கு ஒரு பயிற்சியாளாராக சென்றேன். இதனைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு எஸ்.டி.ஏ.டியிலிருந்து இந்திய விளையாட்டு ஆணையத்தில்(எஸ்.ஏ.ஐ) பயிற்சியாளராக சேர்ந்தேன். 

முதலில் கைப்பந்து வீரர்கள் அதிகம் இருந்த ஆந்திர மாநிலம் குண்டூரில் என்னை பயிற்சியாளராக பணி அமர்த்தியது எஸ்.ஏ.ஐ. அங்கு ஒராண்டு காலம் பணி செய்தேன். 

தமிழ்நாட்டில் உங்களது பயிற்சி அனுபவம் எப்படி? தமிழ்நாட்டு வீரர்கள் எப்படி நீங்கள் தயார் செய்தீர்கள்? 

1995ஆம் ஆண்டு முதல் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு விளையாட்டு திட்டத்தை ஆரம்பித்தார். அதில் நான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டேன். அந்த திட்டம் தான் தமிழ்நாட்டில் கைப்பந்து விளையாட்டை மிகவும் வளர்ச்சி அடைய செய்தது. அந்தத் திட்டத்தின் பல்கலைக் கழகங்களின் போட்டிகளில் தமிழ்நாடு ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. 

இந்தத் திட்டத்திற்கு பிறகு 2003ஆம் ஆண்டு முதல் 2020 வரை கிட்டதட்ட 17 ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக அணிகள் சிறப்பாக விளையாடின. அதாவது இந்த காலகட்டத்தில் 10 தங்கம், 5 வெள்ளி ஒரு வெண்கலம் என வென்று  தமிழ்நாட்டு அணிகள் அசத்தின. 

கைப்பந்து பயிற்சியாளர்

நீங்கள் பயிற்சியளித்த வீரர்கள் எத்தனை பேர் இந்திய அணிக்கு விளையாடியுள்ளனர்? 

நான் பயிற்சியளித்த வீரர்களில் 80 பேர் இந்தியா முழுவது பல்வேறு இடங்களில் விளையாட்டு ஒத்துகீடு மூலம் வேலை செய்து வருகின்றனர். அத்துடன் இதுவரை என்னுடைய வீரர்கள் 35 பேர் இந்தியாவிற்கு விளையாடியுள்ளனர். ஆர்.காமராஜ், சிவராஜன், உக்கிரபாண்டியன், ஜெரோம் வினோத், ஏ.பாக்கியராஜ், ஶ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் எனது வீரர்களில் சிலர். 

தமிழ்நாட்டை பொருத்தவரை கைப்பந்து விளையாட்டு எப்படி உள்ளது? 

கைப்பந்தை பொருத்தவரை தமிழ்நாடு ஒரு அசைக்க முடியாத சக்தியாக தான் உள்ளது. சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் தமிழ்நாட்டு சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக கைப்பந்து, கபடி என்பது கிராமங்களின் விளையாட்டாக உள்ளது. ஏனென்றால் கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டிற்கு தான் குறைவான இடம் தேவைப்படுகிறது. ஆகவே இந்த விளையாட்டுகள் மிகவும் பிரபலம். 

தமிழ்நாட்டில் முதலில் திருநெல்வேலியிலிருந்து பல விளையாட்டு வீரர்கள் வந்தனர்.  அதன்பின்னர் தற்போது தமிழ்நாடு முழுவது கைப்பந்து சற்று பிரபலம் அடைய தொடங்கியுள்ளது. 

தட்சிணாமூர்த்தி

துரோணாச்சார்யா விருதிற்கு விண்ணப்பத்துள்ளது தொடர்பாக உங்களது கருத்து? 

கிட்டதட்ட 30ஆண்டுகளுக்கும் மேலாக நான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது வீரர்கள் பலர் கைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியுள்ளனர். நான் நன்றாக உழைத்துள்ளேன். எனது பயிற்சிக்கு இந்த விருது ஒரு நல்ல அங்கிகாரமாக இருக்கும். இந்த விருதை நான் பெற உங்களது ஆதரவு எனக்கு மிகவும் தேவையான ஒன்று. நான் உழைத்தற்கான பலனாக இந்த விருது கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக கைப்பந்து விளையாட்டு இந்தியாவில் வளர என்ன செய்யவேண்டும்?

இந்தியாவில் தற்போது விளையாட்டுகளுக்கு அரசு நல்ல உதவிகளை செய்து வருகின்றது. ஆனால் கிரிக்கெட், கபடி போன்ற புரோ லீக் போட்டிகள் கைப்பந்து விளையாட்டிற்கும் வேண்டும். அப்போது தான் வீரர்களுக்கு ஒரு நல்ல வளர்ச்சி கிடைக்கும். அது அவர்களின் திறனை வளர்க்க உதவும். 

மேலும் மகளிருக்கு போதிய தொடர்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கும் நிறையே தொடர்கள் நடத்தப்படவேண்டும். அத்துடன் உள்ளூர் வீரர்களை நன்றாக தயார் செய்யவேண்டும், கேலோ இந்தியா திட்டம் ஒரு நல்ல திட்டம். ஆனால் அது தற்போது தான் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் பயன் சில ஆண்டுகளுக்கு பின்பு தான் தெரியும். 

இவ்வாறு தனது பயிற்சி அனுபவங்கள் குறித்து உற்சாகமாக தட்சிணாமூர்த்தி பதிலளித்தார். அவர் தற்போது எஸ்.ஏ.ஐ  பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். எனினும் ஒரு அகாடமி அமைத்து மேலும் பல வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக உள்ளது. இத்தகைய சிறப்பான பயிற்சியாளர் துரோணாச்சார்யா விருது வென்றால் அது தமிழ்நாட்டிற்கும் கைப்பந்து விளையாட்டிற்கும் பெருமையானதாக அமையும்.

மேலும் படிக்க: ‘இந்தியா விற்பனைக்கு அல்ல’- ஹிட்லரை அதிர வைத்த தயான்சந்த் ஆக. 15 ஃபிளாஷ்பேக்

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...