25 ஆண்டுகளுக்கு முன்பாக கின்னஸ் சாதனைப் படைத்த குற்றாலீஸ்வரன் நீச்சல் விளையாட்டை விட்டது ஏன்?

Update: 2021-01-21 04:04 GMT

நீச்சல் விளையாட்டை அதிகம் பின் தொடராதவர் கூட அறிந்து இருக்கும் ஒரு பெயர் என்றால் அது குற்றாலீஸ்வரன். ஏனென்றால், இவர் செய்த சாதனை அத்தனை சிறப்பு மிக்கது. அதிலும் குறிப்பாக 13வயதில் இவர் சாதனைப் புரிந்ததான் இவரை இந்த அளவு பிரபலம் அடைய வைத்தது.

1994ஆம் ஆண்டு இங்கிலீஷ் செனல் என்ற பிரிட்டிஷ் கால்வாய் பகுதியை இவர் நீந்தி கடந்து அசத்தினார். பின்னர் அதேபோல் இத்தாலியிலுள்ள மெஸ்னி மற்றும் ஷன்னோன் கால்வாய், ஆஸ்திரேலியாவிலுள்ள ராட்நெஸ்ட் கால்வாய்,பத்து டிகிரி கால்வாய் என ஒரே ஆண்டில் 5 கால்வாய்களை கடந்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். 25 ஆண்டுகள் கடந்தும் இந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் சாதனையை பாராட்டி 1996ஆம் ஆண்டு 15 வயதில் அர்ஜூனா விருது இவருக்கு வழங்கப்பட்டது. அப்போது மிகச் சிறிய வயதில் அர்ஜூனா விருது வென்ற வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். அதன்பின்னர் இவர் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உள்ளார். இதற்காக அதிக செலவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இவருக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

எனினும் இரண்டு அரசுகளும் கொடுத்த நிதியுதவி இவருக்கு போதாத காரணத்தால் தனியார் நிறுவன ஸ்பான்சர்ஷிப் எதிர்பார்த்தார். அப்போது ஒரு தனியார் நிறுவனம் இவருக்கு ஸ்பான்சர்ஷிப் தருவதாக உறுதியளித்திருந்தது. இதனையடுத்து இவர் ஐரோப்பாவில் நடைபெறும் போட்டிக்கு பயணம் செய்ய தயாராக இருந்தார்.

அந்த சமயத்தில் திடீரென இவருக்கு ஸ்பான்சர்ஷிப் தருவதாக கூறிய தனியார் நிறுவனம் பின்வாங்கியது. இதனால் அந்தப் போட்டிக்கு செல்ல முடியாமல் இவர் விமான நிலையத்தியிலிருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார். அதன்பின்னர் தனது குடும்பநிலையை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார். பொறியியல் படிப்பை முடித்து அமெரிக்காவில் மேல்படிப்பை முடித்து பின்னர் தற்போது ஒரு தொழில்நுட்ப துறை நிறுவனத்தில் இவர் பணி செய்து வருகிறார்.

சரியான நிதியுதவி இல்லாததால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற குற்றாலீஸ்வரனின் கனவு நிறைவேறாமல் போனது. இவர் தற்போது நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். இதனால் சில நாட்கள் கழித்து இவர் ஒரு அகாடமி தொடங்கி பல நீச்சல் வீரர்கள் உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தாலியில் இவர் கால்வாயில் நீச்ச்ல் செய்ததை பார்த்த அந்நாட்டு அரசு குற்றாலீஸ்வரனை அங்கு அழைத்துள்ளது. ஆனால் குற்றாலீஸ்வரன் நான் நீந்தினால் அது என் தாய்நாட்டிற்காக மட்டும் தான் என்று கூறி அந்த அழைப்பை மறுத்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த குற்றாலீஸ்வரன் தன்னால் முடியாவிட்டாலும் தனது அகாடமி மூலம் உருவாகும் வீரர்களை வைத்து இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்று தருவார் என்று எதிர்பார்ப்போம்.

மேலும் படிக்க: கொரோனா காலத்திலும் கொண்டாட வைத்த 5 விளையாட்டு தருணங்கள்!