டி20 உலகக் கோப்பை: மிடில் ஆர்டர் சொதப்பலுக்கு மந்தானாவின் ஆட்டம்தான் தீர்வா?

Update: 2020-02-17 14:55 GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தீவிர பயிற்சியில் உள்ளது. இந்திய அணி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் பங்கேற்றது. அதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணி சந்தித்த மிகப் பெரிய பிரச்னை மிடில் ஆர்டர் பேட்டிங் தான். இந்தத் தொடரில் நடந்த போட்டிகளில் களமிறங்கிய இந்திய மிடில் ஆர்டர் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படவில்லை. ஆஸ்திரேலிய அணி உடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி மந்தானாவின் விக்கெட்டிற்கு பிறகு வேறும் 29 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. அதேபோல இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, பின்னர் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களாக மாறி தடுமாறியது.

இந்த முத்தரப்புத் தொடரில் மிடில் ஆர்டரில் அனைத்து போட்டிகளிலும் சோதப்பிய வேதா கிருஷ்ணமூர்த்தி தான். அவர் முத்தரப்புத் தொடரில் 2,8,7 என ஒற்றை இலக்கத்துடனே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மேலும் மிடில் ஆர்டரில் வேதா கிருஷ்ணமூர்த்தி தவிர அனுபவம் வாய்ந்த மற்றொரு வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் தான். ரிச்சா கோஷ் அல்லது ஜெமிமா ரோட்ரிக்ஸ் மிடில் ஆர்டரில் களமிறங்கினாலும் அவர்களுக்கும் சரியான அனுபவம் இல்லாததால் இந்திய அணி திணறும்.

மேலும் தற்போது உள்ள இந்திய அணியை பொறுத்தவரை ஷாபாலி வர்மா மற்றும் ஹர்மன்பிரீத் பந்துகளை சிக்சர்களுக்கு விரட்ட கூடிய அதிரடி ஆட்டத்தை கொண்டவர்கள். அதேபோல ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் சற்று நின்று ஆட கூடியவர்கள். இந்திய அணியிலேயே அதிரடியாகவும் சற்று நிதனாமகவும் ரன்களைச் சேர்க்க கூடிய அனுபவம் உடையவர் ஸ்மிருதி மந்தானா.

எனவே அவர் தான் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு முக்கிய தீர்வாக இருக்க முடியும். அவர் ஷாபாலி மற்றும் ஹர்மன்பிரீத் உடன் விளையாடும் போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதே ஜெமிமா, வேதா, ரிச்சா உள்ளிட்ட வீராங்கனைகளுடன் விளையாடும் போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு இந்திய அணி சற்று முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கடந்த 2018ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஸ்மிருதி மந்தானா விளையாடியுள்ள 19 டி20 போட்டிகளில் 621 ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் தற்போது முடிந்த முத்தரப்புத் தொடரில் இவர் 15,35,45,55,66 என ரன்கள் அடித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

இந்தக் கருத்தையே தான் ஸ்மிருதி மந்தானா இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில், "மிடில் ஆர்டரில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். மிடில் ஆர்டர் வீராங்கனைக்கு உதவ டாப் ஆர்டர் வீராங்கனைகளில் ஒருவர் 20ஆவது ஓவரை ஆட்டமிழக்காமல் இருக்கவேண்டும். அவ்வாறு நாங்கள் ஒருவர் அவுட் ஆகாமல் இருந்தால் மிடில் ஆர்டர் பிரச்னை தீர்ந்து விடும் " எனக் கூறியிருந்தார். எனவே அவரின் அந்த வார்த்தைகளுக்கு அவரே பொருத்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் உலகக் கோப்பை தொடரில் சிறப்பான பேட்டிங் வீராங்கனைகளை தன்வசம் வைத்துள்ள இந்திய அணி, அதனை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி கோப்பை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.