'உலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சே எங்களது ஆயுதம்'-கேப்டன் ஹர்மன்பிரீத்
மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் 21ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பெற்றுள்ளது.
தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் இதுவரை ஒரு வெற்றியையும் இரு தோல்வியையும் இந்திய அணி சந்தித்துள்ளது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசி தளத்திற்கு ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
அதில், "முன்பு எல்லாம் மகளிர் டி20 போட்டிகளில் 120-130 ஒரு கடின ஸ்கோராக இருந்தது. ஆனால் தற்போது அவை எளிதில் சேஸ் செய்யப்பட்டு விடுகின்றன. மகளிர் கிரிக்கெட் அந்த அளவிற்கு மிகவும் வளர்ந்துள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டை வேறு ஒரு புதிய பரிமானத்திற்கு கொண்டு செல்ல போகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால் டி20 போட்டிகளில் சரியாக விளையாட வில்லை. அந்த நிலை தற்போது மாறியுள்ளது. தற்போது நாங்கள் ஒரு நல்ல டி20 அணியாக மாறியுள்ளோம்.
இந்தத் தொடரில் நாங்கள் அதிக தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் களமிறங்க உள்ளோம். இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலம் பலவீனம் உள்ளது. எங்களது அணிக்கு முக்கிய பலம் சுழற்பந்துவீச்சு தான். ஆகவே அதை எவ்வாறு சிறப்பான முறையில் பயன்படுத்த போகிறோம் என்பதை பற்றியே தற்போது நாங்கள் சிந்தித்து வருகிறோம்.
மேலும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவே நாங்கள் ஆஸ்திரேலிய முத்தரப்பு தொடரில் விளையாடுவதால், உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளுக்கு நாங்கள் எளிதில் மாறிவிடுவோம். அத்துடன் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு சரியான அணியை தேர்வு செய்ய இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அதற்காக தான் ரிச்சா கோஷ் போன்ற இளம் வீராங்கனைகளை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். அத்துடன் எங்களது அணியின் பயிற்சியாளர் ராமன் சிறப்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்" எனக் கூறியுள்ளார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. அப்போது செய்த தவறுகளை திருத்தி இம்முறை இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்திய அணி வரும் 21ஆம் நடைபெறும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.