ஹாலிவுட்டில் டி20 இன்னிங்ஸை தொடங்கும் ஷாருக் கான்!

Update: 2020-12-01 10:42 GMT

2022ல் தொடங்கவிருக்கும் அமெரிக்கா டி20‌ லீக் தொடரில் ஒரு அணியை வாங்கியுள்ளார் இந்திய சினிமா உலகின் முன்னணி நட்சத்திரம் ஷாருக் கான். ஏற்கனவே இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் இவருக்கு சொந்தமாக இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக இந்த அணியினை வாங்கியுள்ளார்.

நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ,‌ டாலாஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் (ஹாலிவுட் நகரம்) என ஆறு நகரங்கள் சார்பாக அணிகள் போட்டியிடவுள்ள நிலையில் லாஸ் ஏஞ்சலஸ் அணியினை வாங்கியுள்ளார் ஷாருக் கான். இவரின் மற்ற அணிகளின் பெயர்களைப் போல இந்த அணிக்கும் எல் ஏ நைட் ரைடர்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு அணியை வாங்கியதோடு மட்டுமல்லாமல் யுஎஸ்ஏ கிரிக்கெட் சம்மேளனத்தின் அனுமதியுடன் இந்த தொடரினை நடத்தும் அமெரிக்கன் கிரிக்கெட் என்டர்பிரைஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராகவும் உள்ளார் ஷாருக் கான். அதோடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரினைச் சேர்ந்த எந்த அணியும் இந்த தொடரில் பங்கேற்க முடியாது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேகேஆர் அணியின் சியிஓ வெங்கி மைசூர், இந்த முடிவு பல காலங்களுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டதாகும் மேலும் இத்தொடர் சிறப்பாக நடைபெற அனைத்து உதவிகளையும் செய்வோம் எனக் கூறியுள்ளார்.

2022 ஐபிஎல் தொடருக்கு பின் தொடங்கவிருக்கும் இத்தொடர் குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் அமெரிக்க கிரிக்கெட் ரசிகர்கள், அவர்களில் கணிசமான பங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஊரடங்கிற்கு பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி!