'வடசென்னையும் கேரமும்' - மறக்கப்பட்ட இந்தியாவின் முதல் உலக சாம்பியன் மரியா இருதயத்தின் கதை!

Update: 2021-01-30 03:32 GMT

வடசென்னை பகுதிக்கும் விளையாட்டிற்கு ஒரு நீண்ட நெடிய தொடர்பு உண்டு. சென்னையை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அது நன்றாக தெரியும். குத்துச்சண்டை, கேரம், கால்பந்து எனப் பல விளையாட்டுகள் அங்கு மிகவும் பிரபலமானவை. குறிப்பாக கேரம் விளையாட்டிற்கு வடசென்னை மிகவும் பிரபலம். ஏனென்றால் இந்தியாவிலிருந்து முதல் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் நம் வடசென்னையை சேர்ந்த மரியா இருதயம்.

1980களில் தொடங்கிய மரியா இருதயத்தின் கேரம் பயணம் சரியாக 1991ஆம் ஆண்டு உச்சம் பெற்றது. அந்த ஆண்டு முதல் முறையாக கேரம் உலக சாம்பியன் பட்டத்தை இவர் வென்று அசத்தினார். அதன்பின்னர் மீண்டும் 1995ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கேரம் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவை சேர்ந்த ஒருவர் கேரம் விளையாட்டில் உலக சாம்பியனாவது அதுவே முதல் முறை. அதிலும் இவர் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றது கூடுதல் சிறப்பு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரியா இருதயத்திற்கு மத்திய அரசு விளையாட்டு துறையில் சிறந்த விருதான அர்ஜூனா விருதை 1996ஆம் ஆண்டு வழங்கியது. இந்த விருதை பெற்ற ஒரே கேரம் வீரர் மரியா இருதயம் தான். 2 முறை உலக சாம்பியன் மற்றும் 9 முறை தேசிய சாம்பியனான இவருக்கு கிடைத்த சிறப்பான கௌரவமாக இதை பார்க்கலாம். தன்னுடைய விளையாட்டு காலத்திற்கு பிறகு இவர் தன்னுடைய வீட்டிலேயே ஒரு அகாடமியை தொடங்கி பல வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

பெரியமேடு பகுதியில் மரியா இருதயத்தின் அகாடமி என்றால் தெரியாதயவர் யாரும் இருக்க முடியாது. எனினும் இத்தனை சிறப்பு மிக்க மனிதரை விளையாட்டு துறை மிகவும் எளிதில் மறந்துவிட்டது. அதற்கு சான்று மரியாவின் மனைவி ஒரு சாலை விபத்தில் இறந்தபோது அவருக்கு உதவ எந்த அரசும் முன்வரவில்லை. அதேபோல அவருடைய அகாடமிக்கு யாரும் நிதியுதவியும் அளிக்கவில்லை.

தற்போது வரை தன்னுடைய சொந்த முயற்சியில் அகாடமி நடத்தி வரும் இவர் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச வீரர் வீராங்கனைகளை உருவாக்கியுள்ளார். இப்போதும் வடசென்னையில் கேரம் விளையாட்டு பிரபலமாக உள்ளது என்றால் அதற்கு இவருடைய அகாடமி ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.

மேலும் வெற்றிமாரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்திற்காக தனுஷிற்கு மரியா இருதயம் கேரம் பயிற்சி அளித்துள்ளார். இதனை படக்குழுவும் படத்தின் தொடக்கத்தில் ஒரு நன்றியை தெரிவித்து இவரை கௌரவித்தது. இத்தனை சிறப்பு மிக்க மனிதரை நாம் மறக்காமல் போற்றி பாராட்ட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்க:60 ஆண்டுகளுக்கு மேலாக கைப்பந்து விளையாட்டின் தலைமையிடமாக இருக்கும் கோவை கிராமம்!