TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

60 ஆண்டுகளுக்கு மேலாக கைப்பந்து விளையாட்டின் தலைமையிடமாக இருக்கும் கோவை கிராமம்!

60 ஆண்டுகளுக்கு மேலாக கைப்பந்து விளையாட்டின் தலைமையிடமாக இருக்கும் கோவை கிராமம்!
X
By

Ashok M

Published: 29 Jan 2021 3:42 AM GMT

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் வேறு விளையாட்டுகள் பிரபலமாக உள்ளன. அந்தவகையில் கோயம்புத்தூர் பகுதியில் ஒரு கிராமத்தில் கைப்பந்து விளையாட்டு 60 ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது.

கோவையிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தடாகம் கிராமம். இந்த கிரமாத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் கைப்பந்து மைதானம் கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால் இந்த கிராமத்திற்கும் கைப்பந்து விளையாட்டிற்கும் அப்படி ஒரு பிரிக்க முடியாத பந்தம். 1940ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு தேவாலயத்தின் தந்தை இங்கு மாணவர்களுக்கு கைப்பந்து விளையாட்டை அறிமுகம் செய்தார்.

அப்போது கனகராஜ் மற்றும் மருதையன் என்ற இரண்டு மாணவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி தமிழ்நாடு அணிக்காக தேர்வாகினர். குறிப்பாக கனகராஜ் 1970களில் இந்திய கைப்பந்து அணிக்கே தேர்வாகி அசத்தினார். இவர்களின் எழுச்சி பல மாணவர்களை கைப்பந்து விளையாட்டை தேர்வு செய்ய வைத்தது. அப்போது முதல் தமிழ்நாடு அணிக்கு தரமான வீரர்களை தரும் இடமாக தடாகம் மாறியது.

இந்த கிராமத்திலிருந்து கைப்பந்து விளையாட்டின் மூலம் பலர் அரசு வேலைக்கு சென்றுள்ளனர். ஒரு சிலர் மத்திய அரசின் வருமான வரி துறை, ரயில்வே துறைக்கும் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் மக்கள் தங்கள் குழந்தைகள் கைப்பந்து விளையாட்டை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.

மேலும் இந்தப் பகுதியில் நடைபெறும் கைப்பந்து தொடர் மற்றும் போட்டிகள் ஒரு பெரிய திருவிழாவை போல் இருக்கும். 12 ஆண்டுகளுக்கு முன்பாக வெறும் ஆண்கள் மட்டும் பங்கேற்று வந்த கைப்பந்து விளையாட்டில் தற்போது இந்த கிராமத்தின் பெண்களும் பங்கேற்று வருகின்றனர். குறிப்பாக அரசு பெண்கள் பள்ளியில் கைப்பந்து விளையாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கிராமத்திலிருந்து வெண்ணிலா மற்றும் சுமையா ஜூனியர் பிரிவில் தமிழ்நாட்டு அணிக்காக விளையாடி அசத்தியுள்ளனர். குறிப்பாக சுமையா சிறந்த வீராங்கனை பட்டத்தையும் வென்று சாதித்துள்ளார். இந்த கிராமத்திலிருக்கும் பெண்களையும் தற்போது கைப்பந்து விளையாட்டு பெரிதாக ஈர்த்துள்ளது. கைப்பந்து விளையாட்டிற்கு தென்னிந்தியாவின் தலைமையிடமாக தடாகம் பகுதி விளங்கி வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு சரியாக ஊக்குவித்து பல வீரர் வீராங்கனைகள் உருவாக வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

மேலும் படிக்க: ’25 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருது கிடைத்திருக்கவேண்டும்’- தனது பயிற்சியாளரின் பத்மஶ்ரீ விருது குறித்து பி.டி.உஷா

Next Story
Share it