மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு - களத்தில் குதித்த ஐபிஎல் அணி

Update: 2020-09-18 13:53 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் கடந்த மே மாதம் நடைபெறமால் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமிரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் யுஏஇயில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிரிக்கெட் உடன் சேர்ந்து ஒரு சமூக கடமையுடன் களமிறங்க உள்ளது.

அதாவது இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெண்களின் முக்கியமான பிரச்னையான மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை செய்ய உள்ளது. மாதவிடாய் தொடர்பாக பெண்கள் சமூகத்தில் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் மாதவிடாய் பருவத்திலுள்ள 350 மில்லியன் பெண்களில் வெறும் 8 மில்லியன் பெண்கள் மட்டுமே சானிடரி நாப்கின் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மாதவிடாய் குறித்த சமூகத்தின் கருத்தை உடைக்கவும், சானிடரி நெப்கின் பயன்பாட்டை வலியுறுத்தவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

இதற்காக சானிடரி நாப்கின் தயாரிக்கும் ‘நியின்’ என்ற நிறுவனத்துடன் ராஜஸ்தா ராயல்ஸ் அணி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் அணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “இந்தியாவில் அதிக நபர்கள் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கின்றனர்.

எனவே சமூக சார்ந்த முக்கிய பிரச்னைகளை கிரிக்கெட்டின் வாயிலாக எளிதில் கொண்டு சேர்க்க முடியும். எனவே தான் நாங்கள் இம்முறை மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை செய்யவுள்ளோம். அத்துடன் சானிடரி நாப்கின் பயன்பாட்டையும் வலியுறுத்த உள்ளோம்” எனத் தெரிவித்திருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டெனியலா வெட் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டுடன் சமூக பிரச்னைக்கான விழிப்புணர்வில் ராஜஸ்தான் அணி இறங்கியுள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க: இரண்டு ஆண்டுகளாக அரசு வேலைக்காக போராடும் தங்கப்பதக்கம் வென்ற கோ-கோ வீராங்கனை