அண்மை செய்திகள்
இரண்டு ஆண்டுகளாக அரசு வேலைக்காக போராடும் தங்கப்பதக்கம் வென்ற கோ-கோ வீராங்கனை
2016ஆம் ஆண்டு இந்திய மகளிர் கோ-கோ அணி தெற்கு ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அந்த அணியில் ஜூஹி ஜா இடம்பெற்று இருந்தார். இவர் தற்போது எந்தவித வேலையுமின்றி வாழ்வாதாரத்திற்காக தவித்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜூஹி ஜா. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். இவருடைய தந்தை கூலி வேலை செய்து வருகிறார். ஜூஹி ஜாவின் குடும்பத்தினர் ஒரே ஒரு அறை உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். அத்துடன் அவர்கள் பொது கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஜூஹி ஜா தேசிய கோ-கோ அணிக்கு தேர்வாகிய பின்பு தங்களின் வறுமை நிலை மாறும் என்ற அந்தக் குடும்பம் எண்ணியது. எனினும் அவர்களின் நிலை இன்னும் வறுமையில் தான் உள்ளது.
ஜூஹி ஜா 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் கோ-கோ அணியில் விளையாடினார். அந்த அணி தங்கப்பதக்கம் வென்றதை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசு அவருக்கு விக்ரம் விருதை அளித்தது. மத்திய பிரதேச மாநில விதிகளின்படி ஒருவர் விக்ரம் விருதை பெற்றால் அவருக்கு அடுத்தாண்டிற்கு அரசு வேலை தரவேண்டும். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்தும் ஜூஹா ஜாவிற்கு அரசு வேலை கிடைக்கவில்லை.
ஜூஹிக்கு விக்ரம் விருது கிடைத்தவுடன் அவர் பார்த்து வந்த ஆசிரியர் வேலையும் பரிபோகியுள்ளது. ஏனென்றால் அவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்பதால் அவர் வேலை செய்த தனியார் பள்ளி ஜூஹிக்கு பதிலாக மாற்று ஆசிரியரை நியமித்தது. இதனால் தற்போது இரண்டு ஆண்டுகளாக வேலையின்றி வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.
ஜூஹியின் நிலை குறித்து மத்திய பிரதேச அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் வேலை அளிப்பதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்பட்டு ஜூஹிக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த சிக்கல்கள் அனைத்து சரி செய்யப்பட்டு ஜூஹிக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.
மேலும் படிக்க: ஜுவாலா குட்டாவுடன் நிச்சயதார்த்தம் செய்த நடிகர் விஷ்ணு விஷால்