ஐபிஎல்: சிஎஸ்கே எடுக்க தவறிய தமிழ்நாட்டு வீரர்கள்

Update: 2020-10-08 08:07 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்வி என தடுமாறி வருகிறது. இம்முறை சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய காரணம் நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் இல்லாதது. அத்துடன் பந்துவீச்சின் போது நடு ஓவர்களில் ரன்களை கட்டுபடுத்த நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லாதததும் சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய இழப்பாக உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அணியாக சிஎஸ்கே இருந்தாலும் சிஎஸ்கே அணி தமிழ்நாட்டிலிருந்து சாய் கிஷோர் தவிர வேறு எந்த பந்துவீச்சாளரையும் எடுக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரிலுள்ள 6 அணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களே முக்கியமான பந்துவீச்சாளர்களாக உள்ளனர். குறிப்பாக பெங்களூரு அணியில் வாஷிங்டன் சுந்தர், சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், கேகேஆர் அணியில் வருண் சக்ரவர்த்தி, டெல்லி அணியில் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் குறைவாக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது இடத்தில் உள்ளார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒரளவு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். அஸ்வின் (3), வருண் சக்ரவர்த்தி (5),நடராஜன் (5), முருகன் அஸ்வின் (4) என விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

எப்போதுமே சிஎஸ்கே அணி நிர்வாகம் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதாவது அவர்கள் அனுபவம் நிறைந்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு. இதுவரை சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுபவம் இல்லாத எந்த புதிய வீரருக்கும் பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தாண்டும் அந்த நிலை தொடர்கிறது.

சாய் கிஷோர் தமிழ்நாடு ரஞ்சி அணி மற்றும் ஒருநாள் அணிக்காக சிறப்பாக பந்து வீசியுள்ளார். இவர் ஒரு இடது கை பந்துவீச்சாளர். இடது கை பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்ஸ்மென்களை சற்று சிரமப்படுத்துவார்கள். ஏற்கெனவே அணியில் ஜடேஜா இருப்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்தத் தொடரில் ஜடேஜா 6 போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் 172 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரின் ரன் விட்டு கொடுக்கும் சராசரி 9.55 ஆக உள்ளது. எனவே நடு ஓவர்களில் பந்துவீச சாய் கிஷோரை மற்றொரு இடது கை சுழற்பந்து வீச்சாளராக சிஎஸ்கே அணியில் எடுக்கலாம்.மேலும் பேட்டிங்கில் நடுகள வரிசையில் களமிறங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கலாம்.

இதன்மூலம் தமிழ்நாட்டு வீரர்களை எடுக்க தவறி இருந்தாலும் எடுத்த இரு தமிழ்நாட்டு வீரர்களையும் சரியாக சிஎஸ்கே அணி பயன்படுத்தலாம். அடுத்த முறையாவது ஐபிஎல் தொடரின் ஏலத்தின் போது தமிழ்நாட்டைச் சார்ந்த உள்ளூர் வீரர்களை சிஎஸ்கே அணி எடுக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு ரசிகர்களின் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஆர்.ஜே.பாலாஜியின் காமெடியான கமெண்ட்ரி ஜோக்ஸ் எல்லை மீறுகிறதா?