ஐபிஎல்: ’கொரோனா பாதிப்பு டூ மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்’- ருதுராஜ் கெய்க்வாட்டின் எழுச்சிப் பயணம்

Update: 2020-10-26 02:31 GMT

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்தச் சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் சந்தித்த தடைகள் என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவைச் சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2019ஆம் ஆண்டு சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட்டை ஏலத்தில் எடுத்தது. எனினும் 2019ஆம் ஆண்டு தொடர் முழுவதும் சென்னை அணியில் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட்

இதனைத் தொடர்ந்து இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ருதுராஜ் நம்பிக்கையாக இருந்தார். இந்தச் சூழலில் அவருக்கு துபாய் வந்த பின்னர் கொரோனா தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மற்ற வீரர்களைவிட அதிக நாட்கள் இவர் தனிமை படுத்தப்பட்டார். இதன்காரணமாக மிகவும் குறைந்த பயிற்சியை மேற்கொண்டார்.

அதன்விளைவாக விளையாடி முதல் 3 போட்டிகளில் சரியான ஸ்கோரை அவரை எட்டமுடியவில்லை. இந்நிலையில் நேற்று நான்காவது முறையாக கிடைத்த வாய்ப்பை ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பயன்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அணியை வெற்றிப் பாதை வரை அழைத்து சென்ற ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன் தோனி உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த இன்னிங்ஸ் தொடர்பாக கெய்க்வாட், “இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தொடரில் எனக்கு நிறையே தடைகள் வந்தன. கொரோனா பாதிப்புடன் நான் அவதிப்பட்டு வந்த போது அணி நிர்வாகம் மற்றும் எனது நண்பர்கள் உடன் இருந்தனர். முதல் மூன்று போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை. எனினும் ஒரு நல்ல இன்னிங்ஸ் விரைவில் ஆடுவேன் என நம்பிக்கையாக இருந்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சொதப்பிய டாப்-5 வீரர்கள்