ஐபிஎல்: அடுத்த தொடரில் சிஎஸ்கே அணி விடுவிக்க அதிக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!

Update: 2020-11-02 12:14 GMT

நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமானதாக அமைந்தது. ஏனென்றால் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தவறியது. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களின் ஏலமில்லை. எனவே சிஎஸ்கே அணி சில வீரர்களை விடுவித்து மாற்று வீரர்களை எடுக்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது. இந்நிலையில் அடுத்த தொடரில் சிஎஸ்கே விடுவிக்க அதிக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் யார்? யார்?

கேதார் ஜாதவ்:

சென்னை அணியின் நடுகள வரிசை மிகவும் மோசமாக உள்ளது. அந்த இடத்தில் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த வீரரை அடுத்த முறை எடுக்க சிஎஸ்கே அணி முடிவெடுக்கும். அப்படியென்றால் தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் நடுகள ஆட்டக்காரர் கேதார் ஜாதவ் விடுவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தத் தொடரில் ஜாதவ் 8 போட்டிகளில் விளையாடி வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேதார் ஜாதவ் 7.8 கோடி ரூபாய்க்கு சென்னை அணியில் கடந்த 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டார்.

முரளி விஜய்:

சென்னை அணியிலிருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு மீண்டும் கடந்த 2018ஆம் ஆண்டு முரளி விஜய் சென்னை அணியில் இடம்பெற்றார். இந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் களமிறங்கி அவர் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் கடைசி நான்கு போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டார். எனவே அடுத்த ஐபிஎல் தொடருக்கு முரளி விஜயை விடுவித்து சிஎஸ்கே அணி மற்றொரு இந்திய ஆல்ரவுண்டரை எடுக்க வாய்ப்புகள் அதிக உள்ளன.

பியூஷ் சாவ்லா:

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி அதிக விலைக்கு ஏலம் எடுத்த வீரர் பியூஷ் சாவ்லா. இவர் 6.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த ஐபிஎல் தொடரில் இவர் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அடுத்த ஐபிஎல் தொடருக்கு ஹர்பஜன் சிங் வரும் பட்சத்தில் அவர் தான் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். அத்துடன் தாஹிரும் அணியில் இருப்பதால் சாவ்லாவை சென்னை விடுவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க: மகளிர் ஐபிஎல் தொடரில் கலக்க காத்திருக்கும் இந்திய வீராங்கனைகள்!