யு-17 கால்பந்து: அசத்திய தமிழகத்தின் மாரியம்மாள்; ருமேனியா போட்டி டிரா

Update: 2020-02-16 15:00 GMT

17வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டிகள் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இத் தொடரை நடத்துவதால் இந்திய கால்பந்து அணி இப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதற்காக இந்திய யு-17 மகளிர் கால்பந்து அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் இன்று துருக்கியில் இந்திய யு-17 அணியும் ருமேனியாவின் யு-17 அணியும் நட்பு ரீதியலான போட்டியில் விளையாடின. இப்போட்டியின் முதல் பாதியில் ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் சுமதி குமாரிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் ருமேனியா அணியின் தடுப்பு ஆட்ட வீராங்கனைகள் அதனைத் தடுத்து விட்டனர்.

அதன்பின்னர் மீண்டும் 27ஆவது நிமிடத்தில் மற்றொரு வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது. அப்போது ருமேனியா கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு பந்தை தடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய தமிழக வீராங்கனை மாரியம்மாள் இந்திய அணிக்கு முதல் கோலை அடித்தார்.

இந்திய அணி முன்னிலை பெற்ற 4ஆவது நிமிடத்திற்குள் ருமேனியா அணியின் அடினா கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தனர். இரண்டாவது பாதியின் தொடக்கம் முதலே இந்திய அணி கோல் போடும் முன்னைப்புடன் விளையாடியது.

ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை மீண்டும் கோலாக மாற்றினார் மாரியம்மாள். இதனால் இந்திய அணி 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. மீண்டும் ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் சுமதி குமாரி மற்றொரு கோலை அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 3-1 என முன்னிலையை அதிகரித்தது.

எனினும் ஆட்டத்தின் 74ஆவது நிமிடம் மற்றும் 83ஆவது நிமிடத்தில் ருமேனியா வீராங்கனைகள் மீரியா மற்றும் அடினா கோல் அடித்து 3-3 என சமன் செய்தனர். இதற்கு பிறகு கோல் அடிக்க இரு அணி வீராங்கனைகளும் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே கடைசியாக இந்திய அணி விட்ட இரண்டு கோல்களால் போட்டி டிராவில் முடிந்தது. இந்த இரண்டு அணிகளும் நட்பு ரீதியிலான இரண்டாவது போட்டியில் வரும் 19ஆம் தேதி மோதவுள்ளனர்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மாரியம்மால் பாலமுருகன் தமிழ்நாட்டின் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பாலமுருகன் ஒரு விசைதறி தொழிலாளி. இவர் நாமக்கல் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கால்பந்து மீது இருந்த ஆர்வத்தால் இவர் சிறிய வயது முதல் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். யு-17 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் மாரியம்மாள் இடம்பெற்றுள்ளார் என்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் பெருமையான ஒன்று.