ஆஸ்திரேலியன் ஓபன்: சுமித் நாகல் வைல்டு கார்டு முறையில் தகுதி !

Update: 2020-12-28 02:35 GMT

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் முன்னணி வீரரான ஆண்டி முரேவிற்கு வைல்டு கார்டு முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் சுமித் நாகலுக்கும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதல் முறையாக சுமித் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார். உலக தரவரிசையில் 136ஆவது இடத்திலுள்ள சுமித் நாகல் ஆசிய-பசிபிக் பிராந்திய வீரர்களின் பிரிவில் இந்த வைல்டு கார்டு தகுதியை பெற்றுள்ளார்.

முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இவர் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று அசத்தினார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதல் சுற்றை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை சுமித் படைத்தார். இரண்டாவது சுற்றில் தீம் இடம் தோல்வி அடைந்து யுஎஸ் ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார். மேலும் 2018ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் தொடரில் முதல் சுற்றில் பெடரருக்கு எதிரான போட்டியில் முதல் செட்டை வென்று இவர் பிரபலம் அடைந்தார்.

23வயதான சுமித் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் இந்தியாவின் சார்பில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்பாக தரவரிசையில் பிரஜ்னேஷ் 129ஆவது இடத்தில் உள்ளார். கடந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் பிரஜ்னேஷ் தகுதிப் பெற்று இருந்தார். இம்முறை ஆஸ்திரேலியன் ஓபன் தொடருக்கு முதல் முறையாக சுமித் தகுதிப் பெற்றுள்ளார்.

கடந்த யுஎஸ் ஓபன் தொடரை போல் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலும் சுமித் அசத்துவார் என்ற நம்பிக்கை அதிகம் எழுந்துள்ளது. கொரோனா ஊடரங்குகிற்கு பிறகு நடைபெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் என்பதால் இந்தத் தொடர் டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கொரோனா காலத்திலும் கொண்டாட வைத்த 5 விளையாட்டு தருணங்கள்!