‘தேசிய கொடி சரியாக இல்லாததால் விளையாட மறுத்த சானியா மிர்சா’- ரீவைண்ட்

Update: 2021-02-10 09:31 GMT

டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவை உலகளவில் எடுத்து சென்றதில் சானியா மிர்சாவிற்கு தனி இடம் உண்டு. இந்தியாவிற்காக டென்னிஸில் ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர். இவர் தனது ஆறு வயதிலிருந்து டென்னிஸ் விளையாட்டை விளையாடி வருகிறார். 2003ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் தொடரில் ரஷ்யாவை சேர்ந்த அலிசாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

அதன்பின்னர் 18வயதான சானியா 2005ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் தொடரில் பங்கேற்றார். அப்போது இவரின் செயல் பலரையும் கவர்ந்தது. அத்துடன் இவரின் நாட்டுப் பற்று மேலோங்கி இருந்தது. அப்படி அவர் என்ன செய்தார்?

இந்தத் தொடரின் ஒரு போட்டியின் முன் ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி தலைகீழாக தொங்கிக் கொண்டு இருந்தது.அதை கண்ட சானியா மிர்சா, கொடியை சரி செய்யும் வரை நான் விளையாடப் போவதில்லை என்று மறுத்துள்ளார். சுமார் 45 நிமிடங்களாக இவர் விளையாடவில்லை. இதை கண்டவுடன் இந்திய தேசிய கொடியை தொடர் அமைப்பாளர்கள் சரி செய்தனர்.

இந்த நிகழ்வு பல இந்தியர்கள் மத்தியில் நெகிழ்வை ஏற்படுத்தியது. இவர் தேசப்பற்றை கண்ட பலர் பாராட்டினர். எனினும் 2010-ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை காதலித்து மணம் புரிவதாகக் கூறினார். அப்போது மீண்டும் இவரது தேசப்பற்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.

அப்போது மீண்டும் சானியா மிர்சா இந்தியாவின் மீது நான் வைத்துள்ள தேசப்பற்று ஒருபோதும் குறையாது என்று கூறினார்.நாம் புகழின் உச்சிக்கு சென்றாலும் அடிப்படையில் நாம் இந்தியரே. எவ்வித சூழ்நிலையிலும் தேசப்பற்றை நாம் விட்டுவிடக்கூடாது என்று இந்நிகழ்வின் மூலம் நமக்கு சானியா மிர்சா உணர்த்தியுள்ளார்.

மேலும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?