'உலகக் கோப்பையை வென்ற போது என்ன நினைத்தேனோ அதே தான் ...'- லாரஸ் விருது வென்ற சச்சின்

Update: 2020-02-18 01:03 GMT

லாரஸ் என்ற அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று நடைபெறற்து. இதில் ‘விளையாட்டின் சிறந்த தருணங்கள்’ என்ற விருது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதிற்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று இருந்த 20 பேரில் சச்சினும் ஒருவர். இதில் சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற தருணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறை சாம்பியனானது.

லாரஸ் விருது வென்ற சச்சின் டெண்டுல்கர்

அப்போது சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தங்களது தோள்களில் சுமந்து வெற்றியை கொண்டாடினர். அந்த நேரத்தில் தனது கைகளில் சச்சின் இந்திய மூவர்ண கோடியை பிடித்து கொண்டிருந்தார். இந்தியாவின் இந்த வெற்றியை சுமார் 135 கோடி ரசிகர்கள் நேரலையில் கண்டுகளித்தனர். இந்த தருணம் விளையாட்டின் சிறந்த தருணம் என்ற விருதை சச்சினுக்கு பெற்று தந்துள்ளது.

ஏனென்றால் தொடர்ச்சியாக 6 உலகக் கோப்பையில் விளையாடிய சச்சின் தனது 6ஆவது முயற்சியில் உலகக் கோப்பையை வென்றார். சமீபத்தில் உனது கனவை துரத்து அது நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும் என்று சச்சின் ஷாபாலிக்கு கூறிய வார்த்தைகளுக்கு அவரே ஒரு சான்றாக இருப்பது பெரும் சிறப்பு.

https://twitter.com/LaureusSport/status/1229499483203031040

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட சச்சின் டெண்டுல்கர், "உலகக் கோப்பையை கையில் வைத்திருக்கும் போது என்ன நினைத்தேன் அதேயே தான் இப்போதும் உணர்கிறேன். அந்தக் கோப்பையையும் அனைத்து இந்தியர்களின் சார்பில் நான் வைத்திருந்தேன். அதேபோல இப்போது அனைத்து இந்தியர்களின் சார்பில் நான் இந்த விருதை வைத்திருக்கிறேன்.

மேலும் எனது 19ஆவது வயதில் தென்னாப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர் கூறியது 'விளையாட்டு தான் உலகத்தை இணைக்கும்' என்றார். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அது தான் தற்போது உலகெங்கும் இருந்து வந்துள்ள வீரர்களான நம்மை இணைத்துள்ளது" என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.