பேட்ஸ்மென் வாஷிங்டனை அன்றே கணித்த ராகுல் திராவிட்!

Update: 2021-01-18 06:20 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இவர் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின்னர் நேற்று இந்திய அணியின் பேட்டிங்கில் 7ஆவது விக்கெட்டிற்கு வாஷிங்டனும் தாகூரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அறிமுக வீரராக தனது முதல் இன்னிங்ஸில் அரைசதம் கடந்து சுந்தர் சாதனைப் படைத்தார். அத்துடன் பிரிஸ்பேன் மைதானத்தில் 7ஆவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட் 5ஆண்டுகளுக்கு முன்பாகவே பாராட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டு இந்திய யு-19 அணி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. இதில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்று இருந்தார். அந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராக இருந்தார்.

அந்தத் தொடரில் வாஷிங்டன் சுந்தர் முதல் போட்டியிலேயே இவர் அரைசதம் கடந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அந்தத் தொடர் முழுவதும் இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் இவர் கலக்கினார். அந்த சமயத்தில் இவரின் பேட்டிங்கை பார்த்து அசந்து போன ராகுல் திராவிட் அன்றே இவரின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்தார்.

அதுதொடர்பாக தற்போது இலங்கை வீரர் ரஸல் அர்னால்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடரின் போது சுந்தரின் பேட்டிங் குறித்து என்னிடம் கூறினார். அப்போது 16வயது சுந்தரின் பேட்டிங் குறித்து என்னிடம் அவர் கூறியிருந்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட் வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’