சிட்னி டெஸ்டில் பும்ரா,சிராஜ் மீது இனவெறி தாக்குதல் - இந்திய அணி புகார்

Update: 2021-01-09 11:32 GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. மூன்றாவது ஆட்டத்தின் முடிவில் இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் ஒரு புகாரை கொடுத்தார்.

அந்தப் புகாரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய இருவரையும் பார்வையாளர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். இந்தப் புகார் தொடர்பாக நடுவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது இந்தச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிட்னி மைதானத்திற்கு பாதி அளவில் மட்டுமே ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இனவெறி தாக்குதலுக்கு பிறகு ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற வாசகம் மிகவும் பிரபலம் அடைந்தது. அத்துடன் இனவெறி தாக்குதல்களுக்கு எதிரான குரல்களும் வலுத்தன. அதேபோல இந்திய வீரர் புஜாரா இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்ற போது இனவெறி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா இந்தியா தொடரிலும் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது. கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளிலும் இந்த மாதிரியான சர்ச்சை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக ஐசிசி மற்றும் போட்டி நடுவர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: பிக்பேஷ் டி20 தொடரில் கலக்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்!