‘ஓடினா போதும்’ என்று ஒலிம்பிக் தகுதியை நோக்கி பயணிக்கும் ஹிமா தாஸின் 21ஆவது பிறந்தநாள் இன்று!
தடகள உலகை இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்த சில தடகள வீரர் வீராங்கனைகளுள் ஒருவர் ஹிமா தாஸ். இவர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற யு-20வயதுகுட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வெளிச்சத்திற்கு வந்தார். இவர் கடந்த வந்த பாதை மிகவும் கடினமான ஒன்று.
அசாம் மாநிலத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஹிமா தாஸ். இவர் தன்னுடய நண்பர்களுடன் சிறுவயதில் வயல்களில் கால்பந்து விளையாடியுள்ளார். அப்போது இவரின் ஓட்ட திறனை பார்த்த சில பயிற்சியாளர்கள் தடகளத்தில் கவனம் செலுத்துமாறு இவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை ஏற்று இவர் ஓட்டப் பந்தயத்தில் கவனம் செலுத்தினார்.
2018ஆம் ஆண்டு 20 வயதுகுட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 400மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இவர் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இவருக்கு 2018ஆம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் 400 மீட்டர் மிக்ஸ்டு தொடர் ஓட்டப்பந்தயத்தில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அந்தப் பதக்கம் தற்போது தங்கப் பதக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
In case you missed it, Assam's #HimaDas scripted history with India's first Track medal at the World U20 #Athletics C'ships.
Look at the emotion in her eyes. What an incredible story Hima Das has scripted in so short a time.@afiindia | #Tampere2018 pic.twitter.com/RKiwH7Xb5v
— The Bridge (@TheBridge_IN) July 13, 2018
ஏனென்றால் அப்போது தங்கப் பதக்கம் வென்ற பஹரேன் அணியில் ஒருவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனால் இந்தியாவின் வெள்ளி தங்கமாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பாவில் 19 நாட்களில் 5 தங்கப்பதக்கம் வென்று இவர் அசத்தினார். இதில் ஒன்று 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் மீதமுள்ள நான்கு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் கிடைத்தன. அத்துடன் இந்தியாவின் சார்பில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையை இவர் தன்வசம் வைத்துள்ளார்.
எனினும் கடந்த ஓராண்டாக இவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இவருக்கு ஏற்பட்ட முதுகுவலி காரணமாக இவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதனால் இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாமல் இருந்தார்.
இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணம் தடகள போட்டிகள் நடைபெறாததால் இவர் பட்டியாலா தேசிய பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இவர் 200 மீட்டர் பந்தய தூரத்தை 22.80 விநாடிகளுக்குள் கடக்க வேண்டும். மேலும் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தை 51.35 விநாடிகளில் கடக்க வேண்டும்.
காயத்திலிருந்து மீண்டிருக்கும் ஹிமா தாஸ் எந்தப் பிரிவில் பங்கேற்க உள்ளார் என்பது சரியாக தெரியவில்லை. அண்மையில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த இவர், “நான் எந்த பிரிவிலும் ஓட தயாரக உள்ளேன். என்னுடைய ஒரே இலக்கு ஓடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற வேண்டும்” எனக் கூறியுள்ளார். தன்னுடைய ஆசையை நிறைவேற்றி இவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெறுவார் என்று நாம் நம்புவோம். அத்துடன் இன்று 21ஆவது பிறந்தநாள் காணும் ஹிமா தாஸ் அவருடைய கனவை நிறைவேற்றி ஒலிம்பிக் பதக்கம் வெல்லுவார் என்று நாம் வாழ்த்துவோம்.
மேலும் படிக்க: கொரோனா காலத்திலும் கொண்டாட வைத்த 5 விளையாட்டு தருணங்கள்!