எல்பிஎல்: டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த இரண்டாவது இந்தியர் இர்ஃபான் பதான் !

Update: 2020-12-14 02:02 GMT

இலங்கை நாட்டில் லங்கா பிரீமியர் லீக் என்ற டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இர்ஃபான் பதான், முனாஃப் பட்டேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் களம் கண்டுள்ளனர். இந்நிலையில் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் இர்ஃபான் பதான் டி20 போட்டிகள் வரலாற்றில் ஆல்ரவுண்டராக சாதனைப் படைத்துள்ளார்.

அதாவது இர்ஃபான் பதான் டி20 போட்டிகளில் இதுவரை 2000 ரன்களை கடந்துள்ளார். அத்துடன் 173 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 2000 ரன்களுக்கு மேல் அடித்து 150 விக்கெட்களையும் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தச் சாதனையை செய்யும் இரண்டாவது இந்திய வீரர் இர்ஃபான் பதான் ஆவார். இவருக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இந்தச் சாதனையை இவர் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகிய இரண்டிலும் சேர்த்து ஜடேஜா செய்துள்ளார்.

அதேபோல இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதானும் சர்வதேச டி20 போட்டிகள், ஐபிஎல் மற்றும் எல்பிஎல் ஆகியவற்றில் சேர்த்து இந்தச் சாதனையை படைத்துள்ளார். 2003ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் முறையாக இர்ஃபான் பதான் களமிறங்கினார். கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பதான் தனது ஓய்வை அறிவித்தார்.

கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் விளையாடிய இர்ஃபான் பதான் 29 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் களமிறங்கினார். அத்துடன் ஐபிஎல் தொடரில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். கடைசியாக 2017ஆம் ஆண்டு இர்ஃபான் பதான் ஐபிஎல் தொடரில் களமிறங்கினார். தற்போது அவர் எல்பிஎல் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழக மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்திக்கு திருமணம்