ஓய்விற்கு பிறகு வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய தோனி

Update: 2020-10-01 02:46 GMT

லாக்டவுன் காலத்தில் உலகம் முழுவதும் பலரின் பொழுதுபோக்கிற்காக பெரிதும் உதவியது வெப் சீரியஸ்கள் தான். இந்தியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொடர்ந்து பல வெப் சீரியஸ்கள் வெளிவந்து வெற்றியும் அடைந்தது. தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தானும் புதிதாக ஒரு வெப் சீரியஸினை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அவரது இரண்டாவது தயாரிப்பாகும.

கடந்த ஆகஸ்ட் மாதம் இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, கடந்த ஆண்டு தோனி என்டர்டெயின்மென்ட் என்ற மீடியா நிறுவனத்தை தொடங்கி "ரோர் ஆஃப் தி லையன்" என்ற டாகுமெண்ட்டரியை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. கபீர் கான் இயக்கிய இத்தொடர் இரண்டு ஆண்டு கால தடைக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்கேற்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை பற்றியதாகும்.

தற்போது தயாரிக்க உள்ள தொடர் ஒரு புதுமுக எழுத்தாளர் எழுதிய இன்னும் வெளியிடப்படாத புத்தகத்தை தழுவி எடுக்க உள்ளனர். இது ஒரு த்ரில்லிங் களமாக இருக்கும் என தோனியின் மனைவியும் புரொடக்சன் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டருமான சாக்ஷி தோனி கூறியுள்ளார்.

இந்த புத்தகம் ஒரு மர்மமான அகோரியின் வாழ்க்கை பயணத்தை பற்றியதாகும். அவரால் வெளிவரும் ரகசியங்கள் அனைத்தும் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் கதைகள் ஆகியவற்றை மாற்றி அமைக்கக்கூடும். தங்களால் முடிந்த வரை முயன்று இந்த அண்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் துல்லியமாக காட்சி படுத்த முயல்வோம் எனவும் சாக்ஷி தோனி கூறியுள்ளார். தற்போது இந்த தொடருக்கான நடிகர்கள் மற்றும் படமாக்கும் இடத்தையும் முடிவு செய்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் “பவர் ப்ளேயர்” விருதினை வென்ற வாஷிங்டன் சுந்தர் – நெகிழ்ச்சியான பெயர் காரணம் என்ன?