தீபக் புனியா உட்பட மூன்று மல்யுத்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Update: 2020-09-03 14:41 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பால் தடைபட்டிருந்த விளையாட்டு பயிற்சிகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகி வருகின்றது. இந்நிலையில் மல்யுத்த வீரர்களுக்கான பயிற்சி முகாம் தற்போது நடைபெற உள்ளது. இதற்காக மல்யுத்த வீரர்கள் சோனிபட்டிலுள்ள தேசிய முகாமிற்கு வந்தனர்.

தேசிய முகாமிற்கு வந்துள்ள மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபக் புனியா உள்ளிட்ட மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தீபக் புனியா, நவின், கிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரும் விளையாட்டு ஆணையத்தின் மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தீபக் புனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்று இருந்தார். இந்த மாதம் இறுதி வரை மல்யுத்த வீரர்களுக்கு சோனிபட்டில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த மூன்று வீரர்களுக்கும் தொற்று உறுதியானதை தொடர்ந்து முகாம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க: ‘போலியோ பாதிப்பு முதல் வீல் சேர் கூடைப்பந்து வரை’- ஒரு பெண்ணின் வெற்றிப் பயணம்