தனது 59ஆவது வயதில் முதல் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த முதியவர்
இணையதளத்தில் என்டிசிஏ செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 59 வயதான வி. ராமசந்திரன் பங்கேற்றார். இவர் எரினா கிராண்ட் மாஸ்டர் சிவசுப்ரமணியத்தின் தந்தை. மேலும் இவர் சிவசுப்ரமணியத்திற்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது 59 வயதில் ராமசந்திரன் என்டிசிஏ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இந்தத் தொடரில் மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன. இவை அனைத்திலும் ராமசந்திரன் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
இந்த வெற்றி குறித்து ராமசந்திரன் ‘டைமஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “என்னுடைய இளம் வயதில் நான் வேலையில் அதிக கவனத்தை செலுத்தியதால் அதிகமாக செஸ் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நான் வீட்டில் இருப்பதால் இணையதள செஸ் போட்டிகளில் கவனம் செலுத்தினேன்.
தற்போது என்டிசிஏ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளேன். இதுவே நான் வெற்றிப் பெறும் முதல் சாம்பியன்ஷிப் பட்டம். என்னுடைய இளம் வயதில் ஓபன் கிராண்ட் மாஸ்டர் தொடர்களில் பங்கேற்று தோல்வி அடைந்திருக்கிறேன். ஆனால் தற்போது என்னுடைய 59ஆவது வயதில் முதல் பட்டத்தை பெற்றுள்ளேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இரண்டு ஆண்டுகளாக அரசு வேலைக்காக போராடும் தங்கப்பதக்கம் வென்ற கோ-கோ வீராங்கனை