ஆனந்திற்கு பின் 28 ஆண்டுகள் கழித்து கேல் ரத்னா விருது வென்ற தமிழன் மாரியப்பன் !

Update: 2020-08-21 13:02 GMT

விளையாட்டு துறையில் மிகவும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தான். இந்தாண்டிற்கான கேல் ரத்னா விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வென்று அசத்தியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் தமிழ்நாட்டிற்கே உலகளவில் பெருமை சேர்த்தார்.

தற்போது மீண்டும் விளையாட்டு துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருது வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். கடைசியாக 2000ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்ராஜ் பிள்ளை கேல் ரத்னா வென்று இருந்தார். எனினும் அவர் மகாராஷ்டிராவில் வசித்த தமிழ் பெற்றொருக்கு பிறந்தார். 1991-92ஆம் ஆண்டு முதல் முறையாக கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது. முதல் கேல் ரத்னா விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வென்று அசத்தினார். அவருக்குப் பிறகு தற்போது மாரியப்பன் தங்கவேலு வென்றுள்ளார்.

மாரியப்பன் உடன் சேர்ந்து கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, மணிகா பத்ரா, வினேஷ் போகட், ராணி ராம்பால் கேல் ரத்னா விருதை வென்றுள்ளனர். அர்ஜூனா விருதை தடகள வீராங்கனை டூட்டி சந்த், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாக்கர் உள்ளிட்ட 27 பேர் வென்றுள்ளனர்.

அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சாக்‌ஷி மாலிக் மற்றும் மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அளிக்கப்படவில்லை. ஏனென்றால் இவர்கள் இருவரும் ஏற்கெனவே உயரிய விருதான கேல் ரத்னா விருதை வென்றவர்கள். எனவே 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் துரோணாச்சார்யா விருதை ஹாக்கி பயிற்சியாளர் ஜூட் ஃபிளிக்ஸ், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் ஜஸ்பால் ரானா உள்ளிட்ட 5 பேர் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். தயான் சந்த் விருதை குத்துச் சண்டை வீரர் லக்கா சிங், கபடி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 15 பேர் வென்றுள்ளனர்.

டேக்ஸி ஓட்டும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் தயான்சந்த் விருதுக்கு பரிந்துரை

இந்த விருதுகள் அனைத்து தேசிய விளையாட்டு தினமான 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரத்யேகமாக காணொளி மூலம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பத்து ஆண்டுகளுக்கு மேலாக சாதித்தும் எட்டாத அர்ஜூனா விருது வருத்ததில் ஹாக்கி வீரர்