TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சாதித்தும்  எட்டாத அர்ஜூனா விருது வருத்ததில் ஹாக்கி வீரர் 

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சாதித்தும்  எட்டாத அர்ஜூனா விருது வருத்ததில் ஹாக்கி வீரர் 
X
By

Ashok M

Published: 20 Aug 2020 3:11 PM GMT

அர்ஜூனா விருது என்பது விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அர்ஜூனா விருதுக்கு டூட்டி சந்த் உள்ளிட்ட 29 பேர் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் தனது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்று இந்திய ஹாக்கி வீரர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் பெனால்டி கார்னர் ஸ்பெலிஸ்ட் ரூபிந்தர் பால் சிங். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியில் விளையாடி வருகிறார். இவர் மிகவும் ஏழ்மை வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவரும் இவருடைய சகோதரரும் ஹாக்கி வீரர்கள். எனினும் இவரது குடும்பத்தின் வறுமை காரணமாக இவருடைய சகோதரர் ஹாக்கி விளையாட்டை விட்டு வேலைக்கு சென்றார்.

இதனால் ரூபிந்தர் பால் சிங் மட்டும் தொடர்ந்து ஹாக்கி விளையாடினார். இவர் முதல் முதலாக ஹாக்கி தேர்வுக்கு சென்ற போது வெறும் 200 ரூபாயுடன் தனது கிராமத்திலிருந்து வந்துள்ளார். திரும்பி செல்ல போதிய பணம் இல்லாததால் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து பணத்தை மிச்சப்படுத்தியுள்ளார். இத்தகைய இன்னல்களுக்கும் நடுவிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தொடர்ந்து இருந்துள்ளது.

ரூபிந்தர் பால் சிங் புரோ லீக்

இதன் விளைவாக கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு பெற்றார். எனினும் 2010ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் தனக்கு என்று ஒரு முத்திரையை ரூபிந்தர் பதித்தார். 2010 அஸ்லான்ஷா கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்று இருந்தார். 2011 ஆம் ஆண்டு பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

அதன்பின்னர் இந்திய அணியின் பெனால்டி கார்னர் கிங்காக மாறினார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற அஸ்லான்ஷா கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பட்டத்தை வென்று ரூபிந்தர் அசத்தினார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் தொடரை ரூபிந்தர் பால் சிங் தலைமையிலான டெல்லி வேவ்ரைடர்ஸ் அணி வென்றது.

இதனைத் தொடர்ந்து ஹாக்கி உலகில் கோல் கீப்பர்கள் அஞ்சும் சிறந்த பெனால்டி கார்னர் ஸ்பெலிஸ்டாக தன்னை ரூபிந்தார் பால் சிங் மேம்படுத்தி கொண்டார். இந்நிலையில் தனக்கு இன்னும் அர்ஜூனா விருது கிடைக்கவில்லை என்பது தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவை இட்டுள்ளார். அதில், “பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிற்காக விளையாடியும் அர்ஜூனா விருது கிடைக்காமல் இருப்பது எனக்கு வருத்தமான ஒன்று. இதற்காக சோர்ந்து அழும் நேரம் எனக்கு இல்லை. என்னுடைய வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை எனது ஆட்டத்தை மேம்படுத்து பாதையில் எடுத்து செல்வேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் பல இக்கட்டான சூழ்நிலையில் கோல் அடித்தும் தனது தடுப்பு ஆட்டத்தால் எதிரணி வீரர்களை கோல் அடிக்க முடியாமலும் ரூபிந்தர் தடுத்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த ரூபிந்தர் சிங்கிற்கு அடுத்த ஆண்டாவது அர்ஜூனா விருது கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

மேலும் படிக்க: டேக்ஸி ஓட்டும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் தயான்சந்த் விருதுக்கு பரிந்துரை

Next Story
Share it