டி20 உலகக் கோப்பையும் இந்தியாவின் அரையிறுதி தோல்விகளும் - துரத்தும் சோக ஃபிளாஷ் பேக்

Update: 2020-02-15 02:42 GMT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளனர். இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் கடந்த கால டி20 உலகக் கோப்பை செயல்பாடுகள் குறித்து சற்று திரும்பி பார்ப்போம். மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 6 முறை நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 4 முறையும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

மகளிர் டி20 உலகக் கோப்பையில் மிகவும் ராசியில்லா அணியாக இந்திய மகளிர் அணி உள்ளது. ஏனென்றால் இந்தத் தொடரில் அதிக முறை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய அணிதான். இந்திய அணி இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் 3 தொடரில் அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது. அதை தற்போது சற்று ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

2009 அரையிறுதிப் போட்டி:

2009ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஜூலன் கோசாமி கேப்டனாக இருந்தார். அந்த சமயம் இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்று இருந்தது. லீக் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் மட்டும் தோல்வி அடைந்திருந்தது. எனினும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இதில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 145 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 93 ரன்கள் எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

2010 அரையிறுதிப் போட்டி:

2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூலன் கோசாமி தலைமையில் இந்திய அணி மீண்டும் களமிறங்கியது. இம்முறையும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இந்திய அணி நியூசிலாந்து அணியிடன் மட்டும் தோல்வியை தழுவியது. எனினும் மற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்றதால் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.

இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் ஆடிய இந்திய அணி 119 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற இரண்டாவது தோல்வியாகும்.

2018 அரையிறுதிப் போட்டி:

2018ஆம் ஆண்டு இந்திய அணி ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையில் களமிறங்கியது. இம்முறையும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. இதனால் அந்தத் தொடரை இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. எனினும் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஹீதர் நைட்டின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 19.3 ஓவர்களில் இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் அடித்து வெற்றிப் பெற்றது.

இதன்மூலம் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் 3ஆவது முறையாக இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்தியாவை துரத்தும் இந்த அரையிறுதிப் போட்டி தோல்வி சோகம் இம்முறையாவது நீங்கி இந்திய அணி முதல் முறையாக கோப்பை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.