டி20 உலகக் கோப்பை: இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும்?

Update: 2020-02-14 07:20 GMT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய மகளிர் ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்றது. இதில் இறுதியில் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. மேலும் இந்தத் தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை வெல்ல இந்திய அணி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

கடினமான பிரிவு:

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி கடினமான பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால், இந்திய அணி இடம்பெற்றுள்ள பிரிவில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, ஆசிய சாம்பியன் பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. ஆகவே இந்திய அணிக்கு ஒரு போட்டியும் எளிதாக இருக்காது. எனவே இந்திய மகளிர் அணி தொடரின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனம்:

இந்திய மகளிர் அணியை பொறுத்தவரை தொடக்க வீராங்கனைகள் ஷாபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தானா ஒரு சிறப்பான ஃபார்மில் உள்ளனர். ஸ்மிருதி மந்தானாவிற்கு ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் பல முறை விளையாடிய அனுபவம் உண்டு. அவரை ஹர்மன்பிரீத் கவுரையும் தவிர இந்திய அணியின் மற்ற வீராங்கனைகள் சற்று அனுபவ மிக்கவர்கள். எனவே ஒரு வேளை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்மிருதி மந்தானா ஆட்டமிழந்து விட்டால் இந்திய அணி மிகவும் தடுமாறும். இதற்கு சான்று தற்போது நடந்து முடிந்த முத்தரப்பு தொடரிலேயே பார்க்கலாம்.

மேலும் ஒரு நல்ல அணிக்கு மிகவும் முக்கியமான அம்சம் அதன் மிடில் ஆர்டர் சிறப்பாக இருப்பது. தற்போது உள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் சற்று அனுபவ வீரர்கள் இல்லாததால் மிகவும் பலவீனமாக உள்ளது. ஜெமிமா ரோட்ரிக்ஸ்,ரிச்சா கோஷ்,தீப்தி சர்மா உள்ளிட்ட வீராங்கனைகள் கண்டிப்பாக உலகக் கோப்பை போட்டியில் ரன்களை சேர்க்க வேண்டும். இல்லையென்றால் இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

ஹர்மன்பிரீத் கவுர் எங்கே களமிறங்க வேண்டும்?

இந்திய அணியிம் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளதால் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திலேயே தான் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் மூன்றாவது இடத்தில் இந்திய அணி முத்தரப்புத் தொடரில் ஜெமிமா ரோட்ரிக்ஸை விளையாட வைத்தது.

ஆனால் அவர் ஒரு போட்டி தவிர மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. எனினும் இந்திய மகளிர் அணியில் இருக்கும் ஒரே அனுபவ வாய்ந்த ஃபினிஷர் இவர் தான். ஆகவே ஹர்மன்பிரீத் சிங் களமிறங்க வேண்டிய இடம் மிகவும் முக்கியமானது.

வேகப்பந்து வீச்சில் கவனம் தேவை:

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த ஜூலன் கோசாமி ஓய்வுப் பெற்றவுடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகவும் பலவீனமாகி உள்ளது. தற்போது உள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை ஷிகா பாண்டே தான் வழிநடத்தி செல்ல உள்ளார். அவரும் அருந்ததி ரெட்டியும் சிறப்பாக பந்துவீச வேண்டும். அவர்கள் விக்கெட் எடுக்கவில்லையென்றாலும் அதிகளவில் ரன்கள் கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏனென்றால் இந்தியாவின் பலமான சுழற்பந்து வீச்சாளர்களிடம் மற்ற அணியினர் சற்று கவனமாக விளையாடுவார்கள். அதனால் அவர்கள் வேகப்பந்து வீச்சை பவுண்டரிகளுக்கு விரட்ட முயற்சி செய்வார்கள். எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று கவனமாக சரியான இடங்களில் பந்துவீசி விக்கெட் எடுக்க முயற்சிப்பதோடு ரன்களையும் கட்டுபடுத்த வேண்டும்.

ஃபீல்டிங்கில் கவனம்:

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை பொதுவாக ஆடுகளங்கள் பெரிதாக இருக்கும். எனவே இந்த இடங்களில் அணியின் ஃபீல்டிங் ரன்களை கட்டுபடுத்த மிகவும் முக்கியமானதாக இருக்கும். அத்துடன் உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் வரும் கேட்ச்கள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானவை. இந்திய அணி முத்தரப்புத் தொடரில் ஃபில்டிங்கில் மோசமாக செயல்பட்டது. ஆகவே உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஃபில்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேற்கூறப் பட்டுள்ள இடங்களில் இந்திய மகளிர் அணி சரியாக திருத்திக் கொண்டு ஒரு திட்டத்தின் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கினால் கோப்பை இந்தியா வசம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.