அண்மை செய்திகள்
மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு 185 ரன்கள் இலக்கு
மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ஹீலி மூன்று பவுண்டரிகள் விளாசினார். மேலும் முதல் ஓவரிலேயே ஷாபாலி வெர்மா ஹீலியின் கேட்சை தவறவிட்டு அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் ஹீலி மற்றும் பெத் மூனி அதிரடியை தொடர்ந்தனர்.
ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ராஜேஸ்வரி கெய்க்வாட் பெத் மூனி கொடுத்த கேட்சை தவறவிட்டார். இதனால் முதல் 6ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் விளாசியது. முதல் 6 ஓவர்களில் இந்திய வீராங்கனைகள் இரண்டு கேட்ச்களை தவறவிட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதனைத் தொடர்ந்து ஹீலி இந்திய பந்துவீச்சை சிதறடிக்க ஆரம்பித்தார். 30 பந்துகளில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் குறிப்பாக 11ஆவது ஓவரில் இவர் 3 சிக்சர்கள் விளாசி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்தது.
இதன்பின்னர் ஹீலி 39 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளின் உதவியுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் மெக் லென்னிங் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
பெத் மூனியும் 41 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி ஒரு சில விக்கெட்களை எடுத்ததால் ரன் விகிதம் சற்று குறைந்தது. கார்டனர் 2 ஹெய்ன்ஸ் 4 ரன்களுடனும் ஆவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இறுதி வரை மூனி ஆட்டமிழக்காமல் 78 ரன்களுடன் இருந்தார்.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது.