அண்மை செய்திகள்
மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. நாளை உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் நாளைய போட்டிக்கு அதிகளவில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு மகளிர் விளையாட்டி போட்டியை அதிக பேர் கண்ட சாதனையையும் நாளை உடைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 90,185 பேர் நேரில் பார்த்தனர். இந்தச் சாதனை நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முறியடிக்கபடும் என்று கருதப்படுகிறது.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க போட்டியை வென்று முதல் முறையாக கோப்பை பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? இந்திய மகளிர் அணி நடப்புத் தொடரில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணியை ஒரு முறை வீழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணி சற்று நம்பிக்கையுடன் இருக்கிறது.
டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்:
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை டாஸ் என்பது மிகவும் முக்கியமானதாக அமையும். அதிலும் குறிப்பாக உலகக் கோப்பை போன்ற தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் என்பது மிகவும் முக்கியமானது. நாளைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யவேண்டும். ஏனென்றால் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானம் பொதுவாக ஃபிளாட் விக்கெட்டாக இருக்கும். எனவே அது பேட்டிங்கிற்கு சாதகமாக தான் அமையும்.
இதனால் முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி நல்ல ஸ்கோரை அடித்து விட்டால், அது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் ஆஸி. அணிக்கு நெருக்கடியாக அமையும். ஏனென்றால் இறுதிப் போட்டி என்ற நெருக்கடியில் ஸ்கோர் நெருக்கடியும் கூடுதலாக அந்த அணிக்கு இருக்கும். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 3 முறை முதலில் பேட்டிங் செய்தே வென்றுள்ளது. எனவே அது ஒரு நல்ல பலமாக இருக்கும்.
கடைசி 5 ஓவர்களில் நன்றாக ரன்கள் அடிக்கவேண்டும்:
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் 10ஆவது ஓவருக்குப் பின் இந்திய அணியின் ரன் விகிதம் மிகவும் குறைந்துவிடுகிறது. இந்திய அணி இதனைக் கண்டிப்பாக இறுதிப் போட்டியில் மாற்ற வேண்டும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 63 ரன்கள் அடித்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே அடித்தது. அதில் குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் வெறும் 37 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹர்மன்பிரீத் மற்றும் மந்தானா சரியாக விளையாடவேண்டும்:
நடப்பு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தானா. இவர்கள் இருவரும் நடப்புத் தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஸ்மிருதி மந்தானா ஷாபாலி வர்மாவுடன் சேர்ந்து சிறப்பான தொடக்க அளித்தால் அது இந்திய அணிக்கு நல்ல பலமாக அமையும்.
மேலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இரட்டை இலக்க ஸ்கோரை அடிப்பதற்குள் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்கிறார். அதிலும் அவர் அவுட் ஆகும் ஷாட்கள் அனைத்தும் தேவையற்றவையாகவே இருக்கின்றன. அணியின் கேப்டன் மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனை இப்படி அவுட் ஆவது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனை அவர் நாளைய போட்டியில் மாற்றி பொறுப்புடன் விளையாட வேண்டும். ஏனென்றால் ஹர்மன்பிரீத் நின்றால் இந்திய அணியின் ரன் விகிதம் நன்றாக அதிகரிக்கும். அது அணிக்கு ஒரு முக்கிய பலமாகவும் அமையும்.
ரன்னிங் பிட்வீன் விக்கெட் :
அதேபோல இந்திய வீராங்கனைகள் பேட்டிங்கின் போது ஓடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் பொதுவாக மைதானங்கள் பெரிதாக இருக்கும். எனவே அங்கு வேகமாக ஓடி ரன் எடுத்து ஃபீல்டர்கள் மீது சற்று நெருக்கடி செய்தால் ஒரு ரன் இரண்டு ரன்னாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணி அதை செய்ய தவறி வருகிறது. மேலும் ரன் எடுக்கும் போது எதிரணியின் ஃபீல்டர்களை இந்திய வீராங்கனைகள் நெருக்கடி தருவதே இல்லை. இதனால் சிங்கிள் மட்டுமே அதிகம் எடுக்கின்றனர்.
இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 'கூலா'க விளையாட வேண்டும்:
இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது களமிறங்கும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் என்னவாக இருந்தாலும் அதனை நினைத்து நெருக்கடி அடையாமல் கூலாக விளையாடவேண்டும். ஏனென்றால் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் 50ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 228 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 47 ஆவது ஓவரின் முடிவில் 215 ரன்கள் எடுத்தது. கடைசி 18 பந்துகளில் இந்திய அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்திய எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தச் சமயத்தில் சொதப்பிய இந்திய வீராங்கனைகள் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 9 ரன்களில் தோல்வி அடைந்து உலகக் கோப்பையை தவறவிட்டனர். எனவே அதுபோன்று நாளைய போட்டியில் செய்யாமல் நிதானமான ஆட்டத்தை இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்த வேண்டும்.