அண்மை செய்திகள்
பளு தூக்குதலில் தனது சாதனையை தானே முறியடித்து தேசிய சாம்பியனான மீராபாய் சானு

தேசிய பளு தூக்குதல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவு போட்டி இன்று நடைபெற்றது. இதில் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு பங்கேற்றார்.
இவர் இன்று நடைபெற்ற க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோ எடையை தூக்கினார். பின்னர் நடைபெற்ற ஸ்னாட்ச் பிரிவில் இரண்டாவது வாய்ப்பில் 87 கிலோ எடையை தூக்கி சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் இந்தப் பிரிவில் மொத்தமாக 203 கிலோ எடையை தூக்கி தேசிய சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்பு மீராபாய் சானு இந்த எடைப்பிரிவில் கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 201 கிலோ தூக்கி தேசிய சாதனையாக வைத்திருந்தார். தற்போது அதனை முறியடித்துள்ளார்.
மேலும் இந்த எடைப் பிரிவில் உலகளவிலுள்ள வீராங்கனைகள் தரவரிசையில் தற்போது இவர் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி சீனாவின் ஜியாங் ஹூயுஹா(212 கிலோ), ஹோ ஸிஹூ(211 கிலோ), கொரியாவின் ரீ சோங் கம் (209 கிலோ) உள்ளனர். இவர்களுக்கு அடுத்து 203 கிலோ தூக்கியுள்ள மீராபாய் சானு தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.
வரும் ஜூலை மாதம் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெற உள்ள நிலையில் மீராபாய் சானு இந்த ஃபார்ம் நீடிக்கும் பட்சத்தில் ஒலிம்பிக்கில் இவர் பதக்கம் வெல்வது மிகவும் எளிதாக இருக்கும். ஒலிம்பிக் போட்டியில் மற்ற வீராங்கனைகளும் இவருக்கும் தகுந்த போட்டியாக இருப்பார்கள் என்பதால் மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கம் வெல்வாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
25 வயது ஆகும் மீராபாய் சானு 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லவில்லை. இதற்கு பின்னர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்றார். மீண்டும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மீராபாய் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதன்பின்னர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சில நாட்கள் போட்டிகளில் பங்கேற்காமால் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தமாக 199 கிலோ தூக்கி வெண்கல பதக்கத்தை மிகவும் குறைந்த வித்தியாசத்தில் தவறவிட்டார். தற்போது மீண்டும் நல்ல ஃபார்மில் இருக்கும் மீராபாய் சானு இந்த முறை தனது ஒலிம்பிக் பதக்க கனவை நிறைவேற்றி இந்தியாவிற்கு பெரும் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.