அண்மை செய்திகள்
யுஎஸ் ஓபன்: 7ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒற்றையர் போட்டியை வென்று சுமித் அசத்தல்
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர் சுமித் நாகல் ஒற்றையர் பிரிவில் இடம்பெற்றுள்ளார். இவர் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சுமித் நாகல் அமெரிக்காவின் பிராட்லி கிளானை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் சுமித் நாகல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் இரண்டு செட்களையும் 6-1,6-3 என்ற கணக்கில் எளிதில் வென்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் கிளான் நாகலுக்கு சிறப்பான பதிலடி கொடுத்தார். இதனால் கிளான் மூன்றாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனினும் நான்காவது செட்டில் மீண்டும் துடிப்புடன் விளையாடிய சுமித் நாகல் 6-1 என்ற கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தினார். இதன்மூலம் 6-1,6-3,3-6,6-1 என்ற கணக்கில் யுஎஸ் ஓபன் தொடரின் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றார். இரண்டாவது சுற்றில் சுமித் நாகல் டோமினிக் தீமை எதிர்த்து நாளை விளையாட உள்ளார்.
Sumit Nagal is the first Indian man to win a match at the #USOpen in 7 years.
He's onto the second round after defeating Klahn 6-1, 6-3, 3-6, 6-1.@nagalsumit I #USOpen pic.twitter.com/h30hVPeaWu
— US Open Tennis (@usopen) September 1, 2020
இந்த வெற்றியின் மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒற்றையர் போட்டியை வென்ற இந்தியர் என்ற சாதனையை சுமித் நாகல் படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற யுஎஸ் ஓபன் தொடரில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முதல் சுற்றில் வெற்றிப் பெற்று இருந்தார். அதற்கு தற்போது சுமித் நாகல் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார்.
மேலும் சுமித் நாகல் கடந்த யுஎஸ் ஓபன் தொடரின் முதல் சுற்றில் அனுபவ வீரர் ஃபெடரரிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். எனினும் அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி ஒரு செட்டை வென்றார். இதனால் டென்னிஸ் உலகில் மிகவும் பிரபலம் அடைந்தார். அத்துடன் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் பட்டியலிலும் இவர் இணைந்தார். இரண்டாவது சுற்றில் டோமினிக் தீம் சற்று அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் சுமித் நாகல் சற்று கவனம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: “ஒலிம்பியாட் வெற்றிக்கு பிறகாவது செஸ் வீரர் வீராங்கனைகளுக்கு விருது…”- விஸ்வநாத் ஆனந்த்