அண்மை செய்திகள்
முத்தரப்பு தொடர்:பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணிக்கு இரண்டாவது தோல்வி

ஆஸ்திரேலிய முத்தரப்பு தொடரில் இன்று மெல்பெர்னில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து மகளிர் அணியும் விளையாடினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தானா மற்றும் ஷாபாலி வர்மா களமிறங்கினர்.
முதல் 6 ஓவர்களில் இந்திய அணி சற்று நிதானமாக விளையாடியது. 6ஆவது ஓவரில் ஷாபாலி வர்மா 8 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். எனினும் அடுத்த வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஸ்மிருதியுடன் ஜோடி சேர்ந்து சற்று அதிரடி காட்ட தொடங்கினர். ஸ்மிருதி மந்தானா 40 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஸ்மிருதியை தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸூம் 20 பந்துகளில் 23 ரன்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி 2 ரன்களுடனும், ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களுடனும், தான்யா பாட்டியா 8 ரன்களுடனும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிக் கொடுத்தனர்.
முதல் 10 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் ஷரப்சோல் 3 விக்கெட்களையும், பிரன்ட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 124 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ஜோன்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தது. எனினும் டெனி வாட் மற்றும் பிரன்ட் சற்று நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வாட் 14 ரன்களுக்கும் பிரன்ட் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இங்கிலாந்து அணி 6 ஓவர்களுக்கு 3 விக்கெட்டை இழந்து 39 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹீதர் நைட் மற்றும் ஸ்கிவர் சிறப்பாக விளையாடினர். இருவரும் பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்தாமல் ஒற்றை ரன்களில் அதிக கவனம் செலுத்தினர். 10 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்தது. ஹீதர் நைட் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து ஸ்கிவர் அரைசதம் கடந்தார். இவர் 38 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் உதவியுடன் 50 ரன்கள் ஆட்டமிழந்தார். இறுதியில் 18.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன்மூலம் இந்தத் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய மகளிர் அணிக்கு இது தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியாகும். இந்திய மகளிர் அணி நாளை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.